ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்தார், ரோகித் சர்மா

இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யாவின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

Update: 2019-12-22 23:46 GMT

* இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 63 ரன்கள் எடுத்தார். அவர் இந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 7 சதம், 6 அரைசதம் உள்பட 1,490 ரன்கள் (28 ஆட்டம்) குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார். இத்துடன் 2019-ம் ஆண்டில் அனைத்து ஒரு நாள் போட்டிகளும் முடிவுக்கு வந்து விட்டன. 2-வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியும் (1,377 ரன்), 3-வது இடத்தில் வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப்பும் (1,345 ரன்) உள்ளனர்.

* ரோகித் சர்மா இந்த ஆண்டில் மூன்று வடிவிலான சர்வதேச போட்டியையும் சேர்த்து (ஒரு நாள் போட்டியில் 1490 ரன், டெஸ்டில் 556 ரன், 20 ஓவர் போட்டியில் 396 ரன்) மொத்தம் 2,442 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் சனத் ஜெயசூர்யாவின் (1997-ம் ஆண்டில் 2,387 ரன்) 22 ஆண்டு கால சாதனையை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

* வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் இந்த ஆண்டில் 1,345 ரன்கள் சேர்த்துள்ளார். இன்னும் 5 ரன் எடுத்திருந்தால், ஒரு நாள் போட்டியில் ஒரு ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரரான பிரையன் லாராவின் (1993-ம் ஆண்டில் 1,349 ரன்) சாதனையை தகர்த்து இருப்பார்.

* ஷாய் ஹோப், ஒரு நாள் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை (67 இன்னிங்ஸ்) நேற்று கடந்தார். இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். தென்ஆப்பிரிக்காவின் அம்லா 57 இன்னிங்சில் இந்த இலக்கை அடைந்ததே சாதனையாக நீடிக்கிறது.

மேலும் செய்திகள்