கிரிக்கெட் சாதனையாளர்கள்: ஸ்ரீகாந்த், அஞ்சும் சோப்ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கிரிக்கெட் சாதனையாளர்களான, ஸ்ரீகாந்த் மற்றும் அஞ்சும் சோப்ரா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

Update: 2019-12-27 23:50 GMT
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர விருது வழங்கும் விழா ஜனவரி 12-ந்தேதி மும்பையில் நடக்கிறது. இந்த முறை வாழ்நாள் சாதனையாளருக்கான சி.கே.நாயுடு விருதுக்கு இந்திய முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதிரடி ஆட்டக்காரான தமிழகத்தை சேர்ந்த 60 வயதான ஸ்ரீகாந்த் 43 டெஸ்டில் விளையாடி 2 சதம் உள்பட 2062 ரன்களும், 146 ஒரு நாள் போட்டிகளில் 4 சதம் உள்பட 4,091 ரன்களும் எடுத்துள்ளார். 1983-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்த ஸ்ரீகாந்த் அந்த உலக கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணியில் அதிக ரன்கள் (38 ரன்) எடுத்தவர் ஆவார். தேர்வு குழு தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.

டெல்லியைச் சேர்ந்த 42 வயதான அஞ்சும் சோப்ரா 12 டெஸ்டில் 548 ரன்களும், 127 ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம், 18 அரைசதம் உள்பட 2,856 ரன்களும் எடுத்துள்ளார். 2005-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.

மேலும் செய்திகள்