ரஞ்சி கிரிக்கெட்டில் அபினவ் முகுந்த் இரட்டை சதத்தால் தமிழக அணி 490 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், அபினவ் முகுந்த்-ன் இரட்டை சதத்தால் தமிழக அணி 490 ரன்கள் குவித்தது.

Update: 2020-02-06 00:26 GMT
வதோதரா,

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் வதோதராவில் நடந்து வரும் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு-பரோடா அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் ஆடிய பரோடா அணி முதல் இன்னிங்சில் 174 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய தமிழக அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 108.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் (206 ரன்) இரட்டை சதம் அடித்தார். இதனை அடுத்து 316 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பரோடா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்தது.

பாட்டியாலாவில் நடந்த இன்னொரு லீக் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் முறையே ஆந்திர அணி 97 ரன்னும், பஞ்சாப் அணி 108 ரன்னும் எடுத்தன. 11 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய ஆந்திர அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய ஆந்திர அணி 2-வது இன்னிங்சில் 134 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய பஞ்சாப் அணி 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல் ரோட்டாக்கில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் அரியானா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசாமை தோற்கடித்தது. டேராடூனில் நடந்த இன்னொரு லீக் ஆட்டத்தில் சர்வீசஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரகாண்ட் அணியை வீழ்த்தியது.

மேலும் செய்திகள்