ரஞ்சி கிரிக்கெட்: பெங்கால், கர்நாடகா அணிகள் கால்இறுதிக்கு தகுதி

ரஞ்சி கிரிக்கெட்டில் பெங்கால், கர்நாடகா அணிகள் கால்இறுதிக்கு முன்னேறியுள்ளன. ரஞ்சி கிரிக்கெட்டில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது.

Update: 2020-02-14 22:59 GMT
பெங்களூரு,

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த கர்நாடகா-பரோடா அணிகள் இடையிலான ஆட்டம் (பி பிரிவு) 3-வது நாளான நேற்று முடிவுக்கு வந்தது. இதில் 148 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பரோடா அணி 296 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 149 ரன்கள் இலக்கை கர்நாடக அணி 44.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கருண்நாயர் 71 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இதன் மூலம் கர்நாடக அணி கால்இறுதிக்கு (4 வெற்றி, 4 டிராவுடன் 31 புள்ளி) தகுதி பெற்றது.

பாட்டியாலாவில் நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் பெங்கால் அணிக்கு எதிராக 190 ரன்கள் இலக்கை நோக்கி களம் புகுந்த பஞ்சாப் அணி 2-வது இன்னிங்சில் 47.3 ஓவர்களில் 141 ரன்னில் சுருண்டது. இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் அகமது 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்கால் அணி கால்இறுதியை உறுதி செய்தது.

தமிழ்நாடு - சவுராஷ்டிரா மோதும் ஆட்டம் (பி பிரிவு) ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 424 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா அணி ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 346 ரன்கள் குவித்துள்ளது. ஆர்பிட் வசவதா சதமும் (126 ரன், நாட்-அவுட்), விக்கெட் கீப்பர் அவி பரோட் சதமும் (82 ரன்) அடித்தனர். இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த ஆட்டம் டிராவில் முடிவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. போனஸ் புள்ளியுடன் மெகா வெற்றி பெற வேண்டும், மற்றொரு ஆட்டத்தில் கர்நாடக அணி தோற்க வேண்டும், அப்போது தான் கால்இறுதி வாய்ப்பு கிட்டும் என்ற நிலைமையில் எதுவும் நடக்காததால் தமிழக அணி கால்இறுதி வாய்ப்பை இழந்து விட்டது. இதே போல் நடப்பு சாம்பியன் விதர்பா, டெல்லி அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பும் முடிவுக்கு வந்தது.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் மத்திய பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) முன்னாள் சாம்பியன் மும்பை அணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது. மும்பை அணி 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 238 ரன்களுடன் டிக்ளேர் செய்து எதிரணிக்கு 408 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேசம் 2 விக்கெட்டுக்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்