ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ உலக கோப்பை பேட்டை ஏலத்துக்கு விடும் கே.எல். ராகுல்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ உலகக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்திய பேட்டை ஏலத்துக்கு விட கே.எல். ராகுல் முடிவு செய்துள்ளார்.

Update: 2020-04-21 09:03 GMT
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் நேற்று தனது 28 ஆவது பிறந்தாளை கொண்டாடினார். இதற்கிடையில் பிறந்தநாளில் வீடியோ தகவல் ஒன்றை ராகுல் வெளியிட்டார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவதற்காக 2019-ம் ஆண்டு  இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்திய பேட்டை ஏலத்துக்கு விட கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் முடிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் ராகுல் கூறியதாவது:-

உலகக் கோப்பைப் போட்டியில் பயன்படுத்திய பேட், கிளவுஸ், கால் காப்புகள், ஹெல்மெட் ஆகியவற்றை ஏலத்தில் விட முடிவெடுத்துள்ளேன். ஏலம் வழியாகக் கிடைக்கும் தொகை, அறக்கட்டளையின் உதவியுடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும். இதைச் செய்ய இதை விட நல்ல நாள் இருக்க முடியாது. அதனால் இந்த ஏலத்தில் பங்கேற்று எனக்கும் குழந்தைகளுக்கு அன்பு காட்டுங்கள். இந்த இக்கட்டான நேரத்தில், பலமாக இருந்து இதில் இருந்து மீண்டு வருவோம் என்றார்.

சமீபத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 5-0 என கைப்பற்றியது இந்தியா. இதில் ராகுல் முக்கிய பங்கு வகித்துள்ளார். 2 அரைசதங்கள் உள்பட 224 ரன்களைக் குவித்துள்ளார். 2019 உலகக் கோப்பைப் போட்டியில் 9 ஆட்டங்களில் விளையாடிய ராகுல், ஒரு சதம் இரு அரைசதங்களுடன் 361 ரன்கள் எடுத்தார்.

கடந்த காலத்திலும் ராகுல் பல விலங்கு நல அமைப்புகளுக்கு நிதி வழங்கியுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தையின் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு அவர் பணம் செலுத்தி உள்ளார். அவர் நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க அவர் தொடர்ந்து சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்