‘எனக்கு மட்டும் இரண்டாவது வாய்ப்பு வழங்கவில்லை’ - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது முகமது ஆசிப் குற்றச்சாட்டு

சூதாட்டத்தில் சிக்கிய மற்ற வீரர்களுக்கு சலுகை காட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனக்கு மட்டும் இரண்டாவது வாய்ப்பு வழங்கவில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் குற்றம்சாட்டினார்.

Update: 2020-05-04 23:15 GMT
புதுடெல்லி, 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2010-ம் ஆண்டில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது அந்த அணியில் இடம் பிடித்து இருந்த முகமது ஆசிப், முகமது அமிர், சல்மான் பட் ஆகியோர் சூதாட்டத்தில் (ஸ்பாட் -பிக்சிங்) ஈடுபட்டது தெரியவந்தது. பணம் பெற்றுக்கொண்டு வேண்டுமென்றே நோ-பால் வீசிய விவகாரம் வெளியாகி சர்ச்சையாக வெடித்தது. இந்த விவகாரத்தில் இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட முகமது ஆசிப்புக்கு 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய அவருக்கு தடைகாலம் முடிந்த பிறகு அணியில் மீண்டும் வாய்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் அவருடன் சிக்கிய முகமது அமிருக்கு தடை முடிந்ததும், பாகிஸ்தான் அணிக்காக விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய மற்ற வீரர்களை போல் தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தவில்லை என்று 37 வயதான பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘எல்லோரும் தவறு இழைப்பார்கள். அதனை நானும் செய்தேன். கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் எனக்கு முன்பும், எனக்கு பிறகும் ஈடுபட்டார்கள். எனக்கு முன்பு சூதாட்டத்தில் ஈடுபட்ட சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருக்கிறார்கள். எனக்கு பின்னர் சூதாட்டத்தில் ஈடுபட்ட சிலர் பாகிஸ்தான் அணியில் இன்னும் விளையாடி கொண்டு இருக்கிறார்கள். சூதாட்டத்தில் ஈடுபட்ட எல்லோருக்கும் இரண்டாவது வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் எனக்கு மட்டும் இரண்டாவது வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. சிலருக்கு தண்டனையிலும் என்னை போல் கடுமை காட்டப்படவில்லை. உலகின் தலைசிறந்த பவுலர்களில் ஒருவராக நான் கருதப்பட்டபோதும் என்னை காப்பாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முயற்சி எதுவும் செய்யவில்லை.

குறுகிய காலம் மட்டுமே கிரிக்கெட் விளையாடினாலும், ஆட்டத்தை விட்டு விலகி பல வருடங்கள் ஆனாலும், கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து), டிவில்லியர்ஸ், ஹசிம் அம்லா (இருவரும் தென்ஆப்பிரிக்கா) போன்ற மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் எனது பந்து வீச்சு குறித்து உயர்வாக பேசுவது நான் எந்த அளவு உலக அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறேன் என்பதை உணர்த்துவதுடன், அது எனக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. நான் எனது பந்து வீச்சு திறமையை ஒருமுறை மட்டும் அல்ல பலமுறை நிரூபித்து இருக்கிறேன். ஒரே பேட்ஸ்மேனை ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஆட்டம் இழக்க செய்து இருக்கிறேன். ஒருமுறை மட்டுமே அதிர்ஷ்டத்தால் சிறப்பாக பந்து வீசிவிடவில்லை. தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டேன். நான் நினைத்தபடி பந்தை ஸ்விங் செய்தேன். இந்த பந்து வீச்சு திறமையை நான் ஒரேநாளில் கற்றுவிடவில்லை. 

இதற்காக வருடக்கணக்கில் கடினமாக உழைத்தேன். சூதாட்ட தடையில் இருந்து திரும்பிய முகமது அமிருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் அணிக்காக விளையாட வாய்ப்பு அளித்தது. ஆனால் அதற்கு அவர் நன்றி தெரிவிக்கும் வகையில் செயல்படவில்லை. 27 வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் விடைபெற்றது சரியானது கிடையாது. இதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எனக்கு உதவி செய்து இருந்தால், தொடர்ந்து விளையாடி இருப்பதுடன், பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டை அடுத்த 2 ஆண்டுகளுக்கு காப்பாற்ற நான் தயாராக இருந்து இருப்பேன். உடற்தகுதி தரம் குறித்து எனக்கு தெரியும். என்ன மாதிரி உடல் தகுதி தேவையோ அதற்கு தகுந்தபடி என்னை தயார்படுத்தி கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்