சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்க உமர் அக்மல் மறுத்தார் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றச்சாட்டு

சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க, உமர் அக்மல் மறுத்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியுள்ளது.

Update: 2020-05-10 23:15 GMT
கராச்சி, 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் உமர் அக்மலுக்கு சமீபத்தில் 3 ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் போது அவரை சூதாட்டத்தில் ஈடுபட வைக்க சிலர் அணுகிய விவரத்தை மறைத்த குற்றத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் உமர் அக்மல் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நேற்று பல புகார்களை அடுக்கினர். அவர்கள் கூறியதாவது:-

“சூதாட்டப்பேர்வழிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் உமர் அக்மலை லாகூரில் இரண்டு முறை சந்தித்து பேசியுள்ளனர். இந்த தகவலை அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்ல தவறினார். தன்னை அந்த நபர்கள் அணுகிய விஷயத்தை மறைத்தது தவறு தான் என்று அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் கடைசி வரைக்கும் தன்னை சந்தித்த ஆசாமிகள் என்ன பேசினார்கள் என்ற விவரத்தை பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை. அவரது நடவடிக்கை எங்களுக்கே வித்தியாசமாக தெரிந்தது. ஒரு பக்கம் சந்திப்பு விவரத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என்றார். இன்னொரு பக்கம் அவர்களுடன் நடந்த ஆலோசனையை வெளிப்படுத்த மறுத்தார். மேலும் இதற்காக அவர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. நேரில் வந்து விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ஒழுங்கு நடவடிக்கை குழு அவரை அறிவுறுத்தியது. அதற்கும் உடன்படவில்லை. இதன் காரணமாகவே உமர்அக்மல் மீது கடுமையான தண்டனை பாய்ந்தது”.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்