இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: முகமது ரிஸ்வான் அரைசதத்தால் 200 ரன்களை கடந்தது பாகிஸ்தான்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், முகமது ரிஸ்வானின் அரைசதத்தால் பாகிஸ்தான் அணி 200 ரன்களை கடந்தது.

Update: 2020-08-15 00:26 GMT
சவுதம்டன், 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. பெரும்பகுதி மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 126 ரன்களுடன் பரிதவித்தது. பாபர் அசாம் 25 ரன்னுடனும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்றைய ஆட்டம் மழையால் ஏறக்குறைய 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்தது. பாபர் அசாம் 47 ரன்களில் கேட்ச் ஆனார். மறுமுனையில் முகமது ரிஸ்வான் நிலைத்து நின்று அணி 200 ரன்களை கடக்க வித்திட்டார். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 86 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது முகமது ரிஸ்வான் 60 ரன்களுடன் ஆடிக்கொண்டிருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்