சோதனைகளை கடந்து சாதிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய சுவாரஸ்யமான அலசல் தொகுப்பொன்றை காணலாம்.

Update: 2020-09-15 23:44 GMT
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை அரங்கேறுகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள தயாராகி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பற்றிய சுவாரஸ்யமான ஒரு அலசல் வருமாறு:-

ஐ.பி.எல். வரலாற்றில் பங்கேற்ற ஒவ்வொரு சீசனிலும் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். ஐ.பி.எல். உதயமான 2008-ம் ஆண்டில் இருந்து இந்த நாள் வரைக்கும் அந்த அணியின் கேப்டனாக டோனி மாற்றமின்றி கம்பீரமாக பயணிக்கிறார். அவரது தலைமையில் சென்னை அணி 3 முறை பட்டம் வென்று இருக்கிறது. 5 முறை இறுதி சுற்றில் தோல்வி அடைந்துள்ளது. ஐ.பி.எல்.-ல் அதிக முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணி, அதிக வெற்றி சதவீதத்தை கொண்ட அணி (வெற்றி சதவீதம் 61.28 அதாவது 165 ஆட்டத்தில் 100-ல் வெற்றி) என்ற பெருமையும் உண்டு. சூதாட்ட புகாரில் சிக்கி 2016, 2017-ம் ஆண்டுகளில் சென்னை அணி தடை நடவடிக்கைக்கு உள்ளானது. இல்லாவிட்டால் சாதனை பட்டியல் இன்னும் நீண்டு இருக்கும்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை, இந்த ஆண்டு போட்டி தொடங்கும் முன்பே சென்னை அணி நிறைய சோதனைகளை சந்திக்க வேண்டியதாகி விட்டது. துபாய் சென்று கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா கொரோனா அச்சத்தால் ‘போட்டி வேண்டாம்’ என்று கூறி தாயகம் திரும்பி விட்டார். ஐ.பி.எல்.-ல் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள (5,368 ரன்) அவரது விலகல் சென்னை அணிக்கு பின்னடைவு என்பதில் மாற்று கருத்து இல்லை. இதே போல் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தனிப்பட்ட காரணத்தால் ‘ஜகா’ வாங்கி விட்டார். அத்துடன் 2 வீரர்கள் உள்பட அணியில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது இன்னொரு ‘அடி’ ஆகும். இதனால் மற்ற அணிகளை காட்டிலும் ஒரு வாரம் தாமதமாகத் தான் பயிற்சியை சென்னை அணி தொடங்கியது.

எத்தனை சறுக்கல் ஏற்பட்டாலும், ‘கேப்டன் டோனி அணியை வெற்றிகரமாக கரைசேர்ப்பார், ‘தல’ இருக்க பயம் ஏன்?’ என்பது அணி நிர்வாகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ஐ.பி.எல்.-ல் அதிக போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றிய (சென்னை மற்றும் புனே அணியை சேர்த்து 174 ஆட்டங்களுக்கு கேப்டன்ஷிப்) டோனி சர்ச்சைகளையும், நெருக்கடியையும் எப்படி சாதுர்யமாக சமாளிப்பது என்பதில் கைதேர்ந்தவர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற 39 வயதான டோனி ஓராண்டுக்கு மேலாக பிரதான போட்டிகளில் எதிலும் விளையாடவில்லை. தனிப்பட்ட முறையில் அவருக்கும் இது ஒரு சவாலான காலக்கட்டம் தான். கேப்டன்ஷிப்பிலும், ரன்வேட்டையிலும் இப்போதும் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

சென்னை அணியில் ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, பிளிஸ்சிஸ், முரளிவிஜய், ஆல்-ரவுண்டர்கள் வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ் என்று அனுபவ பட்டாளத்துக்கு குறைவில்லை. சுழலுக்கு சாதகமான அமீரக ஆடுகளங்களில் 41 வயதான இம்ரான் தாஹிர், பியுஷ் சாவ்லா, ரவீந்திர ஜடேஜா, சான்ட்னெர், சாய் கிஷோர் ஆதிக்கம் செலுத்தலாம். ஆனால் வெளிநாட்டு வீரர்கள் வலுவாக இருக்கும் சென்னை அணியில் முன்னணி இந்திய பேட்ஸ்மேன்கள் இல்லாதது கொஞ்சம் பலவீனமே. இருப்பினும் எப்படிப்பட்ட சூழலிலும் பதற்றமின்றி, சட்டென்று சமயோசிதமாக முடிவு எடுக்கும் திறன் உடைய டோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணிக்கு மீண்டும் ஒரு முறை மகுடம் கிட்டினால், வியப்படைவதற்கு ஏதுமில்லை.

ஒட்டுமொத்த சென்னை அணி வீரர்களின் சராசரி வயது 30.5. ‘ஓல்டு இஸ் கோல்டு’ என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

மேலும் செய்திகள்