‘மந்தமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம்’ சென்னை அணி கேப்டன் டோனி கருத்து

‘டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மந்தமான பேட்டிங்கே தோல்விக்கு காரணம்’ என்று சென்னை அணியின் கேப்டன் டோனி தெரிவித்தார்.

Update: 2020-09-26 23:15 GMT
துபாய்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 44 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. இதில் டெல்லி அணி நிர்ணயித்த 176 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களே எடுத்து சரண் அடைந்தது. 43 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 64 ரன்கள் சேர்த்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த ஆட்டத்தில் 15 ரன் எடுத்து ஏமாற்றிய சென்னை அணியின் கேப்டன் டோனி கூறுகையில் ‘இந்த போட்டி எங்களுக்கு நல்லபடியாக அமையவில்லை. மைதானத்தில் பனியின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். அது மாதிரி இல்லை. ஆடுகளம் சற்று மெதுவான தன்மை கொண்டதாக இருந்தது. எங்களது பேட்டிங்கில் தீவிரம் குறைவாக இருப்பதாக நினைக்கிறேன். தொடக்கத்தில் இருந்தே உத்வேகம் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்தியது. மந்தமான தொடக்கம் காரணமாக அணிக்கு தேவையான ரன் ரேட் விகிதம் உயர்ந்து கொண்டே போனதால் அதிக நெருக்கடியை சந்திக்க வேண்டியதாயிற்று. இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

அடுத்த போட்டிக்கு எங்களுக்கு 6 நாட்கள் இடைவெளி இருக்கிறது. அதற்குள் நாங்கள் தெளிவான திட்டத்துடன் திரும்ப வேண்டியது அவசியமானதாகும். அத்துடன் சரியான அணிச்சேர்க்கை (ஆடும் லெவன்) குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். அம்பத்தி ராயுடு அடுத்த ஆட்டத்திற்கு திரும்புவதால் அணியின் சமநிலை நன்றாகும் என்று நினைக்கிறேன். அவர் விளையாடினால் கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை சேர்த்து பரிசோதிக்க வாய்ப்பு கிடைக்கும்.

எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சீராக பந்து வீசவில்லை. அவர்கள் தங்களது வேகத்தை அதிகரிப்பதுடன் துல்லியமாகவும் பந்து வீச வேண்டும். சுழற்பந்து வீச்சாளர்களும் இன்னும் நல்ல நிலைக்கு வரவில்லை. மின்னொளியால் கேட்ச் வாய்ப்பை தவற விட்டதாக யாரும் நியாயப்படுத்த முடியாது’ என்றார்.

தொடர்ச்சியான இரு தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில் ‘இந்த தருணத்தில் நாங்கள் சற்று குழப்பமான நிலையில் தான் இருக்கிறோம். சில முக்கியமான வீரர்களை இழந்து இருக்கிறோம். எங்களது தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. சவால் அளிக்கக்கூடிய சமநிலை கொண்ட ஆடும் லெவன் அணியை கண்டறிய நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். மூன்று இடங்களில் விளையாடி உள்ளோம். ஒவ்வொரு ஆடுகளமும், சீதோஷ்ண நிலையும் முற்றிலும் வித்தியாசமானதாக உள்ளது. அதற்கு தகுந்த வீரர்களை பயன்படுத்த முயற்சிக்கிறோம். கடந்த 3 நாட்களில் நிறைய கற்றுக்கொண்டோம். கடந்த 12 ஆண்டுகளாக சுழற்பந்து வீச்சு தான் எங்களது பாரம்பரிய பலமாக விளங்கியது. ஆனால் தற்போது எங்களது சுழற்பந்து வீச்சு தடுமாறுகிறது. அதனை சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.

மேலும் செய்திகள்