தனிமைப்படுத்தப்பட்ட வீரர்களுடன் இணைந்து சிட்னிக்கு செல்லும் இந்திய அணி

கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை மீறினார்களா? என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருகிறது.

Update: 2021-01-03 23:30 GMT
இந்திய கிரிக்கெட் வீரர்களான துணை கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில், பிரித்வி ஷா, ரிஷாப் பண்ட், நவ்தீப் சைனி ஆகியோர் மெல்போர்னில் உணவு விடுதிக்கு சென்று சாப்பிட்டது சர்ச்சையை கிளப்பியது. அவர்கள் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை மீறினார்களா? என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனேகமாக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தான் மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு இன்று பிற்பகல் விமானத்தில் புறப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ‘ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையை கவனமாக படித்தால், இது விதிமீறல் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை என்பது தெரியும். இந்த 5 வீரர்களும் கொரோனா தடுப்பு விதியை மீறினார்களா? என்பது குறித்து விசாரிப்பதாகத் தான் கூறியுள்ளது. எனவே இந்த 5 வீரர்களும் அணியினருடன் இணைந்து சிட்னிக்கு பயணிப்பதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை’ என்றும் அந்த அதிகாரி கூறினார்.

மேலும் செய்திகள்