தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: பவாத் ஆலம் சதத்தால் முன்னிலை பெற்றது பாகிஸ்தான்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் பவாத் ஆலம் அடித்த சதத்தால் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றது.

Update: 2021-01-28 01:06 GMT
கராச்சி,

பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 220 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 33 ரன்களுடன் பரிதவித்தது. அசார் அலி (5 ரன்) பவாத் ஆலம் (5 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று பாகிஸ்தான் வீரர்கள் நிதானமாக விளையாடி சரிவை தடுத்து நிறுத்தினர். அசார் அலி-பவாத் ஆலம் கூட்டணியை மதிய உணவு இடைவேளை வரை தென்ஆப்பிரிக்க பவுலர்களால் அசைக்க முடியவில்லை. ஸ்கோர் 121 ரன்களை எட்டிய போது அசார் அலி 51 ரன்களில் (151 பந்து, 4 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் ஆனார். இவர்கள் கூட்டாக 228 பந்துகளை சமாளித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வந்த வீரர்களும் நிலைத்து நின்று ஆடியதால், பாகிஸ்தான் அணி நெருக்கடியில் இருந்து முழுமையாக மீண்டது. விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 33 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய 35 வயதான பவாத் ஆலம் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார். பவாத் ஆலம் 109 ரன்களில் (245 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினார். இதற்கிடையே 8-வது வரிசையில் இறங்கிய பஹீம் அஷ்ரப் துரிதமான ரன்வேட்டை நடத்தி அணியின் ஸ்கோர் 300 ரன்களை கடக்க வைத்தார். அஷ்ரப் தனது பங்குக்கு 64 ரன் ( 84 பந்து, 9 பவுண்டரி) திரட்டினார்.

2-வது நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 107 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் சேர்த்து மொத்தம் 88 ரன்கள் முன்னிலையுடன் நல்ல நிலையை எட்டியுள்ளது. ஹசன் அலி (11 ரன்), நமன் அலி (6 ரன்) அவுட் ஆகாமல் உள்ளனர்.

தென்ஆப்பிரிக்கா தரப்பில் ரபடா, நோர்டியா, நிகிடி, கேஷவ் மகராஜ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

மேலும் செய்திகள்