விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி 2-வது வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்டை வீழ்த்தி தமிழக அணி 2-வது வெற்றியை பெற்றது.

Update: 2021-02-27 00:36 GMT
இந்தூர், 

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தூர், பெங்களூரு, சென்னை உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் இந்தூரில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-ஜார்கண்ட் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் ‘பேட்’ செய்த தமிழக அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது. பாபா அபராஜித் (57 ரன்), கவுசிக் (55 ரன்), ஷாருக்கான் (51 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். கேப்டன் தினேஷ் கார்த்திக் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜார்கண்ட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 199 ரன்களே எடுத்தது. இதனால் தமிழக அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சித்தார்த் 3 விக்கெட்டும், பாபா அபராஜித், சிலம்பரசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 4-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி கண்டு இருந்த ஜார்கண்ட் அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மத்தியபிரதேச அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் ஆந்திராவை சாய்த்து 2-வது வெற்றியை ருசித்தது. 317 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆந்திரா 42.3 ஓவர்களில் 218 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி 2-வது தோல்வியை சந்தித்தது.

பெங்களூருவில் நடந்த ‘சி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் உத்தரபிரதேசம்-ரெயில்வே அணிகள் சந்தித்தன. முதலில் ஆடிய உத்தரபிரதேச அணி 6 விக்கெட்டுக்கு 346 ரன்கள் குவித்தது. பிரியம் கார்க் (115 ரன்) சதம் விளாசினார். அடுத்து களம் கண்ட ரெயில்வே அணி 46.1 ஓவர்களில் 276 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் உத்தரபிரதேச அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.

இதேபிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கர்நாடக அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் 138 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்சருடன் 126 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்ததுடன், அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் தொடர்ச்சியாக அடித்த 2-வது சதம் இதுவாகும். ஒடிசாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்திலும் தேவ்தத் படிக்கல் சதம் (152 ரன்கள்) எடுத்திருந்தார்.

மேலும் செய்திகள்