ஆமதாபாத் ஆடுகளத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நாதன் லயன்

ஆமதாபாத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி 2-வது நாளிலேயே முடிந்ததால் ஆடுகளத்தன்மை (பிட்ச்) குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.

Update: 2021-03-01 00:16 GMT
சிட்னி, 

ஆமதாபாத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது பகல்-இரவு டெஸ்ட் போட்டி 2-வது நாளிலேயே முடிந்ததால் ஆடுகளத்தன்மை (பிட்ச்) குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது தரமற்ற ஆடுகளம் என்று இங்கிலாந்தின் மைக்கேல் வாகன் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கூறினர். முழுமையாக சுழலுக்கு ஒத்துழைத்த இந்த ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர். ஆனால் ஆடுகளத்தை குறை கூறுபவர்களை கடுமையாக சாடிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ‘நாங்கள் எங்கு விளையாடினாலும் ஆடுகளம் குறித்து புகார் சொல்வதில்லை. எங்களுக்கு எந்த ஆடுகளம் வழங்கப்படுகிறதோ அதில் நாங்கள் விளையாடுகிறோம். நான் அறிந்தவரை இந்த ஆடுகளத்தில் எந்த பிரச்சினையும் இல்லை’ என்றார்.

இந்த நிலையில் ஆமதாபாத் ஆடுகளத்திற்கு ஆதரவாக ஆஸ்திரேலிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் குரல் கொடுத்துள்ளார்.

லயன் அளித்த ஒரு பேட்டியில், ‘நாங்கள் உலகம் முழுவதும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான, ஸ்விங் ஆகும் ஆடுகளங்களில் விளையாடி வருகிறோம். அத்தகைய ஆடுகளங்களில் 47 ரன், 60 ரன்களில் எல்லாம் ஆல்-அவுட் ஆகியிருக்கிறோம். அப்போது யாரும் ஆடுகளம் குறித்து வாய் திறப்பதில்லை. ஆனால் சுழற்பந்து வீச்சு எடுபடத் தொடங்கியதும், ஒவ்வொருவரும் அது பற்றி விமர்சிக்க தொடங்கி விடுகிறார்கள். இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு சுழற்பந்து வீச்சாளராக இத்தகைய ஆடுகளத்தை ஆதரிக்கிறேன். இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளன. நான் இரவு முழுவதும் டி.வி.யில் டெஸ்ட் போட்டியை பார்த்தேன். அருமையாக இருந்தது. ஆமதாபாத் ஆடுகளத்தின் பராமரிப்பாளரை சிட்னிக்கு அழைத்து வரலாமா என்ற யோசிக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்