வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி அடைந்தது.

Update: 2021-03-27 01:16 GMT
வெலிங்டன்,

நியூசிலாந்து - வங்காளதேச அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. ‘கன்னி’ சதம் அடித்த டிவோன் கான்வே 126 ரன்கள் (110 பந்து, 17 பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் சதத்தை எட்டிய டேரில் மிட்செல் 92 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். டேரில் மிட்செல் அடித்த முதலாவது சதம் இதுவாகும். 5-வது விக்கெட்டுக்கு கான்வே-மிட்செல் இணை 159 ரன்கள் திரட்டி ஆரம்ப சரிவில் இருந்து மீண்டு அணி வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.

அடுத்து கடின இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச அணி நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 42.4 ஓவர்களில் 154 ரன்னில் அடங்கியது. இதனால் நியூசிலாந்து அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மக்முதுல்லா 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்டும், மேட் ஹென்றி 4 விக்கெட்டும் அள்ளினார்கள். நியூசிலாந்து வீரர் டிவோன் கான்வே ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் நாளை நடக்கிறது.

மேலும் செய்திகள்