பெயர் மாற்றம் பஞ்சாப் அணிக்கு பேரின்பம் அளிக்குமா?

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்கி மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது.

Update: 2021-03-31 20:27 GMT
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்கி மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது. கொரோனா பரவல் எதிரொலியாக ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி போட்டி நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான பஞ்சாப் கிங்ஸ் அணியை பற்றி ஒரு அலசல் வருமாறு:-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை பட்டம் வெல்லாத 3 அணிகளில் பஞ்சாப்பும் ஒன்று. அதிகபட்சமாக 2014-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது. அதன் பிறகு லீக் சுற்றை கூட தாண்டியதில்லை. ஒவ்வொரு ஆண்டும் வீரர்கள் மாற்றம், பயிற்சி குழுவில் மாற்றம் என்று களையெடுத்து வந்த பஞ்சாப் அணி நிர்வாகம் இந்த சீசனில் அணியின் பெயரையே மாற்றியிருக்கிறது. இதுவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் என்ற பெயரில் பங்கேற்ற அந்த அணி இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் என்ற பெயரில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் பஞ்சாப் அணி முதல் 7 ஆட்டங்களில் 6-ல் தோற்றது. அதன் பிறகு மீண்டெழுந்த அந்த அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்து ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை நெருங்கியது. ஆனால் கடைசி இரு லீக்கில் ராஜஸ்தான், சென்னை அணியிடம் தோற்றதால் வாய்ப்பு நழுவிப்போனது.

ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்திய கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான லோகேஷ் ராகுல் (14 ஆட்டத்தில் ஒரு சதம், 5 அரைசதத்துடன் 670 ரன்), மயங்க் அகர்வால் (11 ஆட்டத்தில் ஒரு சதத்துடன் 424 ரன்) சிறந்த ஜோடியாக வலம் வந்தனர். ஆனால் ‘சிக்சர் மன்னன்’ கிறிஸ் கெய்லை முதல் 7 ஆட்டங்களில் அவர்கள் பயன்படுத்தாதது ஒரு குறையாக பார்க்கப்பட்டது. அவர் வந்த பிறகு தான் உண்மையான எழுச்சியை பார்க்க முடிந்தது. கெய்ல் 7 ஆட்டங்களில் 23 சிக்சருடன் 288 ரன்கள் எடுத்தார். வீரர், ஆலோசகர் என்று இரட்டை பணியை கவனிக்கும் 41 வயதான கிறிஸ் கெய்லை இந்த முறை தொடக்கத்தில் இருந்தே களம் இறக்குவார்கள் என்று நம்பலாம். வெஸ்ட் இண்டீசின் அதிரடி பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரன் மற்றும் சர்ப்ராஸ் கான் ஆகியோரும் அதிரடிக்கு தயாராகி வருகிறார்கள்.

அதே சமயம் கடந்த சீசனில் சொதப்பிய மேக்ஸ்வெல், கருண் நாயர், காட்ரெல், கிருஷ்ணப்பா கவுதம், ஜேம்ஸ் நீஷம் உள்ளிட்டோர் கழற்றி விடப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜய் ரிச்சர்ட்சனை ரூ.14 கோடிக்கும், ரிலி மெரிடித்தை ரூ.8 கோடிக்கும் பஞ்சாப் அணி வாங்கியிருக்கிறது. தமிழக ஆல்-ரவுண்டர் ஷாருக்கான், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டின் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் டேவிட் மலான் உள்ளிட்டோர் பஞ்சாப் அணியில் ஐக்கியமாகி, பேட்டிங் வரிசைக்கு மேலும் புத்துயிர் ஊட்டுகிறார்கள்.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் வலுவாக தென்படுகிறது. டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் தான் அவர்களின் பிரதான பலமே. ஆனால் பந்து வீச்சில் முகமது ஷமி தவிர பெரிய அளவில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாதது பலவீனமாக கருதப்படுகிறது. அதுவும் 30 வயதான முகமது ஷமி கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய தொடரின் போது கை மணிகட்டில் காயம் ஏற்பட்டு தாயகம் திரும்பிய பிறகு இன்னும் எந்த போட்டிகளிலும் ஆடவில்லை. புதிய வரவான ஜய் ரிச்சர்ட்சன், ரிலி மெரிடித் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் அசத்தினாலும் அவர்களுக்கு இந்திய சூழலில் அனுபவம் கிடையாது. சுழற்பந்து வீச்சாளர்கள் முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோர் கடந்த சீசனில் ஓரளவு நன்றாக பந்து வீசினார்கள். ஆனால் இருவரும் லெக்ஸ்பின்னர்கள் என்பதால் எல்லா ஆட்டங்களிலும் ஒரே நேரத்தில் இறக்க முடியாது. புதிதாக எடுக்கப்பட்ட வீரர்கள் இந்திய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு செயல்பட்டால் பலவீனம் என்பது படிப்படியாக பலமாக மாறிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

‘இந்த ஆண்டு அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் நிச்சயம் திரும்பும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி இறுதியில் கோப்பை ஏக்கத்தையும் தணிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்கிறார், முதல்முறையாக ஐ.பி.எல்.-ல் கால்பதிக்கும் டேவிட் மலான். மாற்றங்களால் பஞ்சாப் அணி ஏற்றம் பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பஞ்சாப் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 12-ந்தேதி ராஜஸ்தான் ராயல்சை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

மேலும் செய்திகள்