வெஸ்ட்இண்டீஸ்-இலங்கை மோதிய கடைசி டெஸ்ட் ‘டிரா’

வெஸ்ட்இண்டீஸ் - இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் கடந்த 29-ந் தேதி தொடங்கியது.

Update: 2021-04-03 23:48 GMT

இதில் முதல் இன்னிங்சில் வெஸ்ட்இண்டீஸ் அணி 354 ரன்னும், இலங்கை அணி 258 ரன்னும் எடுத்தன. 96 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 377 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்து இருந்தது.

கடைசி நாளான நேற்று முன்தினம் தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 79 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்திருந்த போது, இந்த போட்டி டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் திரிமன்னே 39 ரன்னும், கேப்டன் கருணாரத்னே 75 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஒஷாடா பெர்னாண்டோ 66 ரன்னுடனும், தினேஷ் சன்டிமால் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். முதலாவது டெஸ்டும் டிராவில் முடிந்து இருந்ததால் 2 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

 முதல் இன்னிங்சில் சதம் அடித்த வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் ஆட்டநாயகன் விருதும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.

மேலும் செய்திகள்