வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: கருணாரத்னே இரட்டை சதத்தால் இலங்கை அணி 512 ரன்கள் குவிப்பு

இலங்கை -வங்காளதேச அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது.

Update: 2021-04-24 22:23 GMT

 இதில் முதலில் ‘பேட்’ செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 541 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் கருணாரத்னே 85 ரன்னுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 26 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

4-வது நாளான ேநற்று கருணாரத்னே, தனஞ்ஜெயா டி சில்வா தொடர்ந்து ஆடினார்கள். முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்த ஜோடியை பிரிக்க வங்காளதேச பவுலர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. கருணாரத்னே 387 பந்துகளில் தனது முதலாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. நேற்றைய ஆட்டம் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 149 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 512 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்தது. கருணாரத்னே 419 பந்துகளில் 25 பவுண்டரியுடன் 234 ரன்னும், தனஞ்ஜெயா டி சில்வா 278 பந்துகளில் 20 பவுண்டரியுடன் 154 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு இதுவரை 322 ரன்கள் திரட்டியுள்ளனர். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இன்னும் முதல் இன்னிங்சே முடியாத நிலையில் இந்த போட்டி ‘டிரா’வில் முடிவது உறுதியாகி விட்டது.

மேலும் செய்திகள்