வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை அணி 469 ரன்கள் குவிப்பு

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 469 ரன்கள் குவித்தது.

Update: 2021-05-01 00:22 GMT
பல்லகெலே, 

இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் கருணாரத்னே 118 ரன்னில் ஆட்டம் இழந்தார். திரிமன்னே 131 ரன்னுடனும், ஒஷாடா பெர்னாண்டோ 40 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய திரிமன்னே 140 ரன்கள் எடுத்த நிலையில் தஸ்கின் அகமது பந்து வீச்சில் ‘கேட்ச்’ கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய மேத்யூஸ் (5 ரன்), தனஞ்ஜெயா டி சில்வா (2 ரன்), பதும் நிசங்கா (30 ரன்) விரைவில் ஆட்டம் இழந்தனர். நிலைத்து நின்று ஆடிய ஒஷாடா பெர்னாண்டோ 81 ரன்னில் ‘கேட்ச்’ கொடுத்து வெளியேறினார். தேனீர் இடைவேளைக்கு பிறகு மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டம் போதிய வெளிச்சம் இல்லாததால் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. நேற்றைய ஆட்டம் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 155.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 64 ரன்னுடனும், ரமேஷ் மென்டிஸ் 22 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்