டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி பாகிஸ்தான் இன்னிங்ஸ் வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி பாகிஸ்தான் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

Update: 2021-05-02 00:18 GMT
ஹராரே,

பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 176 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 426 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பவாத் ஆலம் 140 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து 250 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, பாகிஸ்தானின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 46.2 ஓவர்களில் 134 ரன்னில் முடங்கியது. இதன் மூலம் பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 116 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது.

மேலும் செய்திகள்