சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் போன்று இந்திய அணியால் ஆதிக்கம் செலுத்த முடியாது - கவாஸ்கர் சொல்கிறார்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் போன்று இந்திய அணியால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்று கவாஸ்கர் கூறினார்.

Update: 2021-06-05 20:46 GMT
புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 2 முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. வேறு எந்த ஆசிய அணியும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. ஆனாலும் சமீபத்திய ஆண்டுகளில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களில் இந்தியா தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தற்போதைய இந்திய அணியால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக வெற்றிக்கொடி நாட்ட முடியுமா? என்ற கேள்விக்கு இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த பதில் வருமாறு:-

1970 மற்றும் 80-களில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்தது. இதே போல் ஆஸ்திரேலியாவும் (1990 மற்றும் 2000-ம் களில்) நீண்ட காலம் வீறுநடை போட்டது. அதே போன்று இந்திய அணியால் ஆதிக்கம் செலுத்த முடியுமா என்பதை நிச்சயம் என்னால் சொல்ல முடியாது. அந்த சமயத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரும்பாலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவும் அப்படி தான். அவர்களை போன்று இந்திய அணியால் செய்ய முடியுமா? என்று கேட்டால் சந்தேகம் தான். காரணம், இந்திய அணியிடம் அபரிமிதமான திறமை இருக்கிறது. ஆனால் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை என்பதை பார்க்கிறோம். குறிப்பாக வெளிநாட்டில் இந்தியாவின் செயல்பாடு மெச்சும் அளவுக்கு நிலையாக இல்லை என்பது தான் கொஞ்சம் வருத்தம். மற்றபடி இ்ந்திய அணியின் திறமையை எடுத்துக் கொண்டால் வானமே எல்லை.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

மேலும் செய்திகள்