இந்தியாவுக்கு எதிரான தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு - காயத்தால் குசல் பெரேரா விலகல்

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக குசல் பெரேரா விலகினார்.

Update: 2021-07-16 23:07 GMT
கொழும்பு,

இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெறுகிறது. இங்கிலாந்து பயணத்தை முடித்து விட்டு திரும்பிய இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் உள்பட 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கடந்த 13-ந் தேதி தொடங்க இருந்த இந்த தொடர் 5 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு நாளை ஆரம்பமாகிறது.

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நாளை நடக்கிறது. இந்த போட்டி தொடருக்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய 2-ம் தர அணி, இலங்கை சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான இரண்டு (ஒரு நாள், 20 ஓவர்) தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. விளையாட்டு மந்திரி நமல் ராஜபக்சேவின் ஒப்புதலுக்கு பிறகு அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இலங்கை அணியின் புதிய கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த 4 ஆண்டுகளில் நியமனம் செய்யப்பட்ட 10-வது கேப்டன் ஆவார். இங்கிலாந்து தொடரில் கேப்டனாக இருந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான குசல் பெரேரா அந்த பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடவில்லை. இதேபோல் பயிற்சியின் போது இடது கணுக்காலில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோவும் அணியில் இடம் பெறவில்லை.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கான இலங்கை அணி வருமாறு:-

தசுன் ஷனகா (கேப்டன்) தனஞ்ஜெயா டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, பதும் நிசங்கா, சரித் அசன்கா, வனிந்து ஹசரன்கா, அஷென் பண்டாரா, மினோத் பானுகா, லஹிரு உதரா, ரமேஷ் மென்டிஸ், சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, லக்சன் சண்டகன், அகிலா தனஞ்ஜெயா, ஷிரன் பெர்னாண்டோ, தனஞ்ஜெயா லக் ஷன், இஷான் ஜெயரத்னே, பிரவீன் ஜெயவிக்ரமா, அசிதா பெர்னாண்டோ, கசுன் ரஜிதா, லஹிரு குமரா, இசுரு உதனா.

மேலும் செய்திகள்