இலங்கை கிரிக்கெட் வீரர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தில் சம்பளம் குறைக்கப்படுவதுடன், திறமை, உடல்தகுதி, தலைமை பண்பு, நடத்தை உள்பட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு வீரர்கள் 4 பிரிவாக தரம் பிரிக்கப்பட்டு சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது.

Update: 2021-08-21 06:24 GMT
இந்த நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த இலங்கை வீரர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மறுத்து வந்தனர். இந்த நிலையில் சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு இலங்கை வீரர்கள் புதிய ஒப்பந்தத்துக்கு சம்மதித்தனர்.

இதன்படி இலங்கை கிரிக்கெட் வாரிய தொழில்நுட்ப கமிட்டியால் உருவாக்கப்பட்ட நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தத்தில் தனஞ்ஜெயா டி சில்வா, குசல் பெரேரா, கருணாரத்னே, சுரங்கா லக்மல், சன்டிமால் உள்பட 18 வீரர்கள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்டு இருக்கும் இந்த புதிய ஒப்பந்தம் டிசம்பர் 31-ந் தேதி வரையிலான 5 மாத காலத்துக்குரியதாகும். இதனை இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. புதிய ஒப்பந்தத்தில் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் கொரோனா நடத்தை விதிமுறைகளை மீறியதால் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள குணதிலகா, குசல் மென்டிஸ், டிக்வெல்லா ஆகியோரது பெயர் இடம் பெறவில்லை.

மேலும் செய்திகள்