மகளிர் 20 ஓவர் பிக்பாஷ் கிரிக்கெட்: இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சதம்

57 பந்துகளில் சதமடித்த ஸ்மிரிதி மந்தனா மகளிர் பிக்பாஷ் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்

Update: 2021-11-17 12:45 GMT
ஆஸ்திரேலியா 

மகளிர் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று மதியம்  நடைபெற்ற 48 வது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர்ஸ் அணியின் சார்பாக விளையாடும் நட்சத்திர இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சதம் அடித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற 47 வது லீக் ஆட்டத்தில்  அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை 12 ரன்கள்  வித்தியாசத்தில் வீழ்த்தி பெர்த் ஸ்கார்சேர்ஸ்  அணி வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய   போட்டியில்  மெல்போர்ன் ரெனேகட்ஸ் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியில் அதிகபட்சமாக இந்திய வீராங்கனை ஹர்மான்ப்ரீத் கவுர் 55 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். 20 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.

176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணியின்  தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா எதிரணியின் பந்துவீச்சை  துவம்சம் செய்தார். 57 பந்துகளில் சதமடித்த அவர் மகளிர் பிக்பாஷ் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த மந்தனா - வில்சன் ஜோடி 7 ரன்கள் மட்டுமே எடுத்ததால் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ம்ரிதி மந்தனா 64 பந்துகளில் 114 ரன்கள் குவித்தார். 

மேலும் செய்திகள்