ஆஷஸ் டெஸ்ட்: 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 45/1

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 236 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

Update: 2021-12-18 13:53 GMT
அடிலெய்டு,

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட நேரமுடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தனர். 

நேற்று நடந்த 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை  தொடங்கியது. 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று நடந்த 3-வது நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்தின் டேவிட் மலான் 80 ரன்களும் , ஜோ ரூட் 62 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 84.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 236 ரன்கள் எடுத்திருந்தது.

இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தன்னுடைய 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர் 38 பந்துகளுக்கு 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். 

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. மார்கஸ் ஹாரிஸ் 21 ரன்களுடனும் மைக்கேல் நெசெர் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். 

மேலும் செய்திகள்