வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி 367 ரன்களுக்கு ஆல் அவுட்

தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Update: 2022-04-01 12:28 GMT
டர்பன்,

வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும் இன்று முதல் டெஸ்டில் மோதி வருகிறது.
 
இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கரும், சரல் எர்வீயும் களமிறங்கினர். எல்கர் 67 ரன்களில் அவுட்டானார். சரல் எர்வீ 41 ரன்களில் வெளியேறினார்.

கீகன் பீட்டர்சன் 19 ரன்னிலும், ரியான் ரிக்கல்சன் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி 76.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்த போது, போதிய வெளிச்சமின்மையின் காரணமாக முதல்நாள் ஆட்டம் முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. தெம்பா பவுமாவும் (53), கைல் வெரின்னும் (27) இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். தென் ஆப்பிரிக்க அணி இரண்டாம் நாள் தொடக்கத்தில் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர். அணியில் அதிகபட்சமாக பவுமா 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 121 ஓவர்கள் முடிவில் 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. வங்காளதேச தரப்பில் காலத் அகமது அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து வங்காளதேச அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்