டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் பாபர் அசாம் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.;
துபாய்,
டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் (936 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இரண்டு அரைசதம் விளாசியதன் மூலம் (875 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரநிலையாகும். இதனால் 2-வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் (826 புள்ளி) 3 இடம் அதிகரித்து முதல்முறையாக டாப்-5 இடங்களுக்குள் நுழைந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் ரிஷப் பண்ட் 6-வது இடத்திலும், ரோகித் சர்மா 9-வது இடத்திலும், விராட் கோலி 12-வது இடத்திலும் உள்ளனர்.
வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர்கள் புஜாரா 19 இடங்கள் எகிறி 19-வது இடத்தையும், ஸ்ரேயாஸ் அய்யர் 11 இடங்கள் உயர்ந்து 26-வது இடத்தையும், சுப்மான் கில் 10 இடம் ஏற்றம் கண்டு 54-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.