இந்தியாவில் ஒரு வீரர் இப்படி ஹீரோவாக கொண்டாடப்படுவதை நம்ப முடியவில்லை - ஜஸ்டின் லாங்கர்

தோனியை இந்திய ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடுவது வியப்பை கொடுப்பதாக லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.

Update: 2024-05-25 07:15 GMT

Image Courtesy: @IPL / @BCCI / X

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த தொடரில் நாளை நடைபெறும் இறுதிஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் தோனி, ரோகித் விளையாடிய சென்னை, மும்பை அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.

மேலும், கோலி விளையாடிய பெங்களூரு பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி கண்டு வெளியேறியது. அதிக ரசிகர்களை கொண்ட இந்த 3 அணிகளும் லீக் சுற்று மற்றும் எலிமினேட்டர் ஆட்டத்துடன் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

இந்த 3 வீரர்களில் 5 கோப்பைகளை வென்ற ரோகித் சர்மாவை கேப்டனாக கழற்றி விட்ட மும்பை நிர்வாகத்திற்கு அந்த அணி ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல கோப்பையை வெல்லாவிட்டாலும் ஒவ்வொரு வருடமும் முழுமூச்சுடன் பெங்களூரு அணிக்காக போராடும் விராட் கோலி மீது ஆர்.சி.பி ரசிகர்கள் வெறித்தனமான அன்பை வைத்திருக்கின்றனர்.

ஆனால் அவர்களை மிஞ்சும் அளவுக்கு இந்தியாவுக்காக 3 உலகக் கோப்பைகளை வென்று 5 ஐ.பி.எல் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள எம்.எஸ்.தோனி மீது சி.எஸ்.கே ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த ஐ.பி.எல் ரசிகர்களும் கண்மூடித்தனமான அன்பை வைத்திருக்கின்றனர். தோனி பேட்டிங் செய்வதை பார்ப்பதற்காக தங்கள் பேட்ஸ்மேன் அவுட்டாக வேண்டும் என விரும்பும் அளவுக்கு அவர் மீது சென்னை ரசிகர்கள் அன்பை வைத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தோனியை இந்திய ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடுவது வியப்பை கொடுப்பதாக லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, அது அற்புதமானது. முதலில் அதை நான் கேட்டுள்ளேன். பின்னர் சி.எஸ்.கே அணிக்கு எதிராக நாங்கள் 2 போட்டிகளில் விளையாடினோம். குறிப்பாக லக்னோவுக்கு அவர்கள் விளையாட வந்தனர்.

லக்னோ மைதானத்தில் சுமார் 50000 பேர் அமர முடியும். ஆனால் உண்மையாக அன்றைய நாளில் 48,000 ரசிகர்கள் எம்.எஸ்.தோனியின் 7-வது நம்பர் ஜெர்ஸியுடன் லக்னோவில் இருந்தார்கள். அதை என்னால் நம்ப முடியவில்லை. பின்னர் சென்னைக்கு விளையாட நாங்கள் சென்றோம். அங்கே 98 சதவீதம் அல்ல 100 சதவீதம் ரசிகர்கள் தோனிக்கு ஆதரவாக இருந்தனர். இந்தியாவில் ஒரு வீரர் இப்படி ஹீரோவாக கொண்டாடப்படுவதை நம்ப முடியவில்லை.

இந்தியாவில் இதற்கு முன் விளையாடிய போது சச்சின் டெண்டுல்கரை அவ்வாறு பார்த்துள்ளேன். பின்னர் ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளராக இருந்த போது விராட் கோலி, தோனி கொண்டாடப்பட்டனர். ஆனால் இங்கே அதை விட அதிகமாக அவரை கொண்டாடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்