இதை விட அற்புதமான இந்திய அணியை தேர்வு செய்ய முடியாது...அதிலும் குறிப்பாக... - முகமது கைப்

டி20 உலகக்கோப்பை தொடருக்கு இதை விட அற்புதமான இந்திய அணியை தேர்வு செய்ய முடியாது என்று முகமது கைப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-02 13:08 GMT

புதுடெல்லி,

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்கெட் கீப்பர்களாக நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங், நடராஜன், கெய்க்வாட் ஆகிய வீரர்களை தேர்வுக்குழு கழற்றி விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இதை விட அற்புதமான இந்திய அணியை தேர்வு செய்ய முடியாது என்று அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவுக்கு முன்னாள் வீரர் முகமது கைப் பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக 4 ஸ்பின்னர்கள் மற்றும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் (ஆல் ரவுண்டர்களையும் சேர்த்து) தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய அணியில் ஸ்பெஷலான சமநிலையை கொடுப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-

"அஜித் அகர்கர் இதை விட சிறந்த அணியை தேர்ந்தெடுக்க முடியாது. மிகவும் வலுவான அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 4 ஸ்பின்னர்கள் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது நல்ல சமநிலையை கொடுக்கிறது. மேலும் 8 பவுலர்களில் அக்சர் படேல், ரவிந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஆல் ரவுண்டர்கள். ஷிவம் துபேவும் பந்து வீசுவார். ஜெய்ஸ்வால் உங்களுக்கு ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடி நல்ல துவக்கத்தை கொடுப்பார்.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நீங்கள் எப்போதும் பகல் நேரத்தில் விளையாடுவீர்கள். எனவே அங்கே பனியின் தாக்கம் இருக்காது. அதனால் பவர் பிளே ஓவர்களில் உங்களால் அட்டாக் செய்து ஆக்ரோஷமாக விளையாட முடியும். ரோகித் சர்மாவாலும் அதே போல விளையாட முடியும். அதே நேரத்தில் உங்களால் துபேவிடம் 2 - 3 ஓவர்களை கொடுக்க முடியும். அதனாலேயே அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அது நல்ல தேர்வாகும்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்