இதை செய்திருந்தால் ஆர்.சி.பி தற்போது பல பட்டங்களை வென்றிருக்கும் - அம்பத்தி ராயுடு

ஆர்.சி.பி அணி எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

Update: 2024-05-24 09:25 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நடப்பு ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் முதல் 8 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்த அந்த அணி அதன்பின் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று அதிரடியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. இருப்பினும் நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

நடப்பு சீசனில் பெங்களூரு அணியின் தோல்விக்கு ஆஸ்திரேலிய வீரரான கிளென் மேக்ஸ்வெல்லும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் அதிரடி ஆட்டக்காரரான அவர் இந்த தொடரில் வெறும் 52 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிலும் ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

முன்னதாக லீக் சுற்றில் சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் வென்றதை கோப்பையை வென்றதற்கு நிகராக விராட் கோலியும் ,ஆர்,சி,பி வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடி தீர்த்தனர். இதையடுத்து சி.எஸ்.கே அணியை தோற்கடித்து வெறித்தனமாக கொண்டாடினால் மட்டும் கோப்பையை வென்று விட முடியாது என்று ஆர்.சி.பி அணிக்கு முன்னாள் வீரர் அம்பாத்தி ராயுடு அறிவுரை வழங்கினார்.

மேலும் ஆர்.சி.பி கோப்பையை வெல்வதற்கு இந்திய வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதே சமயம் தோல்வியை சந்தித்த சென்னை இப்போதும் 5 கோப்பைகளை வென்ற சாம்பியன் என்று அவர் ஆர்.சி.பி ரசிகர்களை கிண்டலடித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆர்.சி.பி அணியினர் தனிப்பட்ட சாதனைகளை தாண்டி ஒன்றாக சேர்ந்து அணியாக விளையாடியிருந்தால் இந்நேரம் குறைந்தது 2 - 3 கோப்பைகளை வென்றிருக்கும் என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

பல வருடங்களாக அணியை ஆர்வத்துடன் ஆதரித்து வரும் அனைத்து ஆர்.சி.பி ரசிகர்களை நோக்கி எனது இதயம் செல்கிறது. நிர்வாகமும், கேப்டன்களும், வீரர்களும் தனிப்பட்ட சாதனைகளை தாண்டி அணியின் நலனை முதன்மையாக கொண்டிருந்தால் இந்நேரம் ஆர்.சி.பி பல பட்டங்களை வென்றிருக்கும்.

இந்த நேரத்தில் அவர்கள் எவ்வளவு அற்புதமான வீரர்களை அணியிலிருந்து போக விட்டார்கள் என்பதை நினைத்து பாருங்கள். எனவே முதலில் அணியின் நலனுக்காக விளையாடக்கூடிய வீரர்களை அணிக்குள் கொண்டுவர ஆர்.சி.பி ரசிகர்கள் தங்களின் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மெகா ஏலத்தில் இருந்து ஒரு பெரிய புதிய அத்தியாயம் தொடங்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்