டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் இடம் பெறப்போவது யார்? - தேர்வு குழு தீவிர ஆலோசனை

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிக்கு வீரர்களை தேர்வு செய்வது குறித்து தேர்வு கமிட்டி தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.

Update: 2024-04-17 20:12 GMT

புதுடெல்லி,

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்தை சந்திக்கிறது. 9-ந்தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட உத்தேச பட்டியலை மே 1-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கெடு விதித்துள்ளது.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் வீரர்களின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிக்கும் இந்திய தேர்வு குழு அதன் அடிப்படையில் வீரர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதையொட்டி ஏற்கனவே தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவிடம் 2 மணி நேரம் விவாதித்துள்ளார். இத்தகைய ஆலோசனை தொடர்ந்து நீள்கிறது.

பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அணித் தேர்வில் பரிசோதனை முயற்சி நிச்சயம் இருக்காது. இந்திய அணிக்காக விளையாடியவர்களே தேர்வு செய்யப்படுவார்கள். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். போட்டியில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்களுக்கு இடம் கிடைக்கும்' என்று குறிப்பிட்டார்.

தொடக்க வரிசை ஆட்டக்காரர் இடத்திற்கு சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடையே போட்டி நிலவுகிறது. இவர்களில் ஒருவர் அனேகமாக வெளியே உட்கார வைக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை இருவரும் தங்களது திறமையை நிரூபித்து காட்டி அணிக்கு தேர்வு செய்யப்படும் சூழல் உருவானால், ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் பணியை செய்யும் தற்போது கொல்கத்தா அணிக்காக ஆடும் ரிங்கு சிங், சென்னை அணிக்காக அதிரடி காட்டும் ஷிவம் துபே ஆகியோரில் ஒருவருக்கே இடம் கிடைக்கும். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை அவரது பந்து வீச்சு இன்னும் கவலைக்குரியதாகவே இருக்கிறது. என்றாலும் அவரது இடத்திற்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை.

விபத்தில் இருந்து மீண்டு ஐ.பி.எல். மூலம் மறுபிரவேசம் செய்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டுக்கு ஏறக்குறைய இடம் உறுதியாகி விட்டது. 2-வது விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் ஷர்மா ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்வது என்பது உண்மையிலேயே தேர்வு குழுவுக்கு தலைவலியாக இருக்கும். இதே போல் 3-வது சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு அக்ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் ஆகியோரில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பெறுவதில் சிக்கல் இருக்காது. இவர்கள் 10 பேரும் உடல்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு பயணிப்பது உறுதி.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கலக்கும் ரியான் பராக், மயங்க் யாதவ், அபிஷேக் ஷர்மா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் மத்வால் போன்ற புதுமுக வீரர்களை நேரடியாக 20 ஓவர் உலகக் கோப்பையில் ஆட வைக்க தேர்வு குழு விரும்பவில்லை. இரு நாட்டு தொடரில் வாய்ப்பு கொடுத்து, அதன் மூலம் இத்தகைய பெரிய போட்டிக்கு பரிசீலிக்க வேண்டும் என்பதே தேர்வு குழுவின் எண்ணமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்