ஐ.பி.எல் இறுதிப்போட்டி; இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் - மேத்யூ ஹைடன்

ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.

Update: 2024-05-26 04:09 GMT

கோப்புப்படம்

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன.

இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவுவார்கள் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இங்கே கொல்கத்தா வெல்லும் என்று எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. சில நாட்கள் ஓய்வெடுத்து 2வது தகுதி சுற்று போட்டியில் ஐதராபாத் ஆட்டத்தை பார்த்த கொல்கத்தா அணியினர் அவர்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து கொண்டிருப்பார்கள். அத்துடன் முதலாவது தகுதி சுற்று போட்டியில் ஐதராபாத் அணியை தோற்கடித்த கொல்கத்தா நல்ல வேகத்தைக் கொண்டுள்ளனர்.

மேலும் தரமான சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இங்குள்ள செம்மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வித்தியாசத்தை ஏற்படுத்துவதோடு கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவுவார்கள் என்று நான் நினைக்கிறேன். இறுதிப்போட்டி என்பது அனைத்தையும் சரியாக எளிமையாக பெறுவதாகும்.

மிகவும் கடினமான இந்த தொடரில் வலுவான இதயத்தை கொண்டவர்கள் மட்டுமே கடைசியில் கோப்பையை வெல்ல முடியும். அதிர்ஷ்டம் என்பதும் விளையாட்டு வீரர்களின் வாழ்வில் முக்கிய பங்காற்றும். ஆனால் அனைத்தையும் விட போட்டி நாளில் நீங்கள் உங்களுடைய அணிக்காக எப்படி ஈடுபாடுடன் விளையாடுகிறீர்கள் என்பது முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்