முதல் இன்னிங்ஸ்ஸின் போது இந்த மைதானத்தில் ரன்களை சேர்க்க கடினமாக இருந்தது - டு பிளெஸ்சிஸ்

இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சு எடுபடாமல் போனதே தோல்விக்கு காரணம்.

Update: 2024-04-07 07:18 GMT

Image Courtesy: Twitter

ஜெய்ப்பூர்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 183 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் விராட் கோலி 72 பந்தில் 113 ரன்கள் அடித்தார். இதையடுத்து 184 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 189 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் தரப்பில் அதிரடியாக ஆடிய பட்லர் 58 பந்தில் 100 ரன்னும், சஞ்சு சாம்சன் 42 பந்தில் 69 ரன்னும் எடுத்தனர். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது,

முதல் இன்னிங்ஸ்ஸின் போது இந்த மைதானத்தில் ரன்களை சேர்க்க கடினமாக இருந்தது. என்னை பொறுத்தவரை 190 ரன்கள் என்பது போதுமான ஒன்றுதான். இருப்பினும் 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக அடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது சரியான முடிவு. ஏனெனில் பனி இருக்கும் போது இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும். நாங்கள் முதல் நான்கு ஓவரில் சிறப்பாக பந்து வீசியதாக நினைக்கிறோம்.

மாயங்க் டாகர் வீசிய ஒரு ஓவரில் 20 ரன்கள் சென்றது தான் எங்களுக்கு பாதகமாக அமைந்தது. அப்போது தான் எங்களிடம் இருந்து போட்டி அவர்கள் பக்கம் திரும்பியது. களத்தில் பட்லர் மற்றும் சாம்சன் ஆகிய வலதுகை ஆட்டக்காரர்கள் இருந்ததாலே மேக்ஸ்வெல்லுக்கு ஓவர் வழங்காமல் இரண்டு இடது கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பை வழங்கினோம். ஆனால் இந்த போட்டியில் எங்களது பந்துவீச்சு எடுபடாமல் போனதே தோல்விக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்