இறுதிப்போட்டிக்கு அந்த அணி வருவதை கொல்கத்தா விரும்பாது - இந்திய வீரர் கருத்து

ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கு இந்த அணி வருவதை கொல்கத்தா விரும்பாது என இந்திய வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-22 11:57 GMT

Image Courtesy: @KKRiders

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்தன. லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில் பிளே ஆப் சுற்றில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதிசுற்று ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தோல்வி கண்ட ஐதராபாத் அணி 2வது தகுதிசுற்று ஆட்டத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2வது தகுதிசுற்று ஆட்டத்திற்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

இந்நிலையில் ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு அணி மட்டும் வந்து விடக்கூடாது என்று கொல்கத்தா விரும்பும் என இந்திய வீரர் வருண் ஆரோன் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பேப்பரில் கண்டிப்பாக கொல்கத்தா வெற்றி பெறக்கூடிய அணியாக இருக்கிறது. ஆனால் வெற்றியாளர் அன்றைய நாளில் தீர்மானிக்கப்படுவார்.

அங்கே உங்களுடைய அணி சிறப்பாக அல்லது மோசமாக இருப்பது முக்கியமல்ல. இருப்பினும் இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி அணி விளையாடுவதை கொல்கத்தா அணியினர் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் ஆர்.சி.பி அணியிடம் தற்போது வேகம் உள்ளது. ஒருவேளை இறுதிப்போட்டிக்கு சென்றால் நம்மால் கோப்பையை வெல்ல முடியும் யாராலும் நிறுத்த முடியாது என்ற தன்னம்பிக்கையை ஆர்.சி.பி அணியினர் கொண்டுள்ளனர்.

இருப்பினும் இன்னும் முக்கியமான போட்டிகள் இருக்கிறது. இறுதிப் போட்டியின் அழுத்தம் வித்தியாசமாக இருக்கும். ஆனால் அதில் விளையாடுவதற்கு ஆர்.சி.பி தகுதி பெறுவதை கொல்கத்தா அணியினர் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் ஆர்.சி.பி அணியினர் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்