ஜாம்பவான்கள் சச்சின், கவாஸ்கர் படைக்காத தனித்துவமான சரித்திர சாதனை படைத்த ஜெய்ஸ்வால்

ஜெய்ஸ்வால் இதுவரை தனது டெஸ்ட் கெரியரில் அடித்த 3 சதங்களையும் 150+ ரன்களாக மாற்றியுள்ளார்.

Update: 2024-02-18 12:53 GMT

image courtesy; twitter/@ICC

ராஜ்கோட்,

ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக பென் டக்கெட் சதமடித்து 153 ரன்கள் எடுக்க இந்தியா அணி சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பின் 126 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்தியா தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை 430/4 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் இரட்டை சதம் (214), சுப்மன் கில் 91 ரன்கள், சர்பராஸ் கான் 68 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 557 என்ற மெகா இலக்கை இங்கிலாந்து சேசிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து 122 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியின் 2வது இன்னிங்சில் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய ஜெய்ஸ்வால் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி 14 பவுண்டரி 12 சிக்சருடன் 214 ரன்கள் விளாசி தன்னுடைய இரண்டாவது இரட்டை சதத்தை அடித்தார். கடந்த 2023 வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர் தன்னுடைய முதல் போட்டியிலேயே சதமடித்து 171 ரன்கள் குவித்தார். அந்த வரிசையில் இந்த தொடரில் விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது போட்டியிலும் இரட்டை சதமடித்து 209 ரன்கள் விளாசினார்.

இந்த போட்டியில் 214 ரன்கள் குவித்துள்ள ஜெய்ஸ்வால் இதுவரை தன்னுடைய கெரியரில் அடித்த 3 சதங்களையும் 150-க்கு மேற்பட்ட ரன்களாக மாற்றியுள்ளார்.

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 3 சதங்களையும் 150+ ரன்களாக (171, 209, 214*) மாற்றிய முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சரித்திர சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் உட்பட வேறு எந்த இந்திய வீரரும் இப்படியொரு சாதனையை படைத்ததில்லை.

உலக அளவில் ஜாவேத் மியான்தத், ஆண்ட்ரூ ஜோன்ஸ், பிரையன் லாரா, மகிளா ஜெயவர்த்தனே, மேத்யூஸ் சின்க்ளைர், கிரேம் ஸ்மித் ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்