எங்களுடைய பவுலர்கள் நன்றாகதான் பந்து வீசினார்கள் - தோல்வி குறித்து மும்பை கேப்டன் பாண்ட்யா பேட்டி

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை தோல்வியை தழுவியது.

Update: 2024-03-27 22:48 GMT

image courtesy: twitter/ @IPL

ஐதராபாத்,

17-வது ஐ.பி.எல். தொடர் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசென் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தனர். இதன் மூலம் ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 277 ரன்கள் குவித்தது. இது ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாகும்.

இதனையடுத்து மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடினர். இருப்பினும் அவர்களால் இலக்கை நெருங்க முடியவில்லை. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 246 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவியது. இது ஐ.பி.எல். வரலாற்றில் 2-வது இன்னிங்சில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில், 'ஆடுகளம் இன்று பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் 277 ரன்கள் என்பது நீங்கள் எவ்வளவு நன்றாக பந்து வீசினாலும், வீசாவிட்டாலும் எதிரணி பேட்டிங் சிறப்பாக விளையாடியிருக்கிறது என்றுதான் அர்த்தம். எங்களுடைய பவுலர்கள் நன்றாகதான் பந்து வீசினார்கள். ஆனால் ஆடுகளம் கடினமாக இருந்தது. 500 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறோம் என்றால் எந்த அளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

நாங்கள் சில கட்டத்தில் கொஞ்சம் வித்தியாசமாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் எங்களுடைய பவுலர்கள் இளம் வீரர்கள். அனுபவம் இல்லாதவர்கள். அவர் நிச்சயம் கற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்று ஆடுகளத்தில் நான் பார்த்ததை நிச்சயமாக ரசிக்கின்றேன். எங்களுடைய பேட்ஸ்மேன்களும் இன்று நன்றாகவே விளையாடினார்கள். திலக் வர்மா, ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் நல்ல தொடக்கத்தை எங்களுக்கு அளித்தார்கள்.

சில விஷயங்களில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தி சரியாக செய்ய வேண்டும். அதை செய்தால் நிச்சயம் நாங்கள் அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று விடுவோம். மபகா அதிக ரன்களை கொடுத்தாலும், நிச்சயம் அவருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அவர் இளம் வீரர் இதுபோன்ற மைதானங்களில் பார்வையாளர்கள் முன் அவர் விளையாடி இருக்க மாட்டார். அவர் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் நம்பிக்கை குறையாமல்தான் இருக்கின்றார்' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்