அடுத்த ஐ.பி.எல். சீசனில் மும்பை அணியின் முதல் போட்டியில் விளையாட பாண்ட்யாவுக்கு தடை...காரணம் என்ன..?

அடுத்த சீசனில் மும்பை அணியின் முதல் போட்டியில் விளையாட பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Update: 2024-05-18 10:24 GMT

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் லக்னோ வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்கள் குவித்தார்.

பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து மோசமாக இந்த சீசனை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் லக்னோ அணிக்கு எதிரான இப்போட்டியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. அத்துடன் ஏற்கனவே இந்த வருடம் 2 முறை மும்பை அணி இந்த தவறை செய்தது. அப்போது முதல் முறை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு மட்டும் அபராதம் விதித்த ஐ.பி.எல். நிர்வாகம் 2-வது முறை மொத்த மும்பை அணிக்கும் அபராதம் விதித்திருந்தது.

ஆனால் தற்போது 3-வது முறையாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கத் தவறியதால் விதிமுறைப்படி மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது. அத்துடன் இப்போட்டிக்கான சம்பளத்திலிருந்து 30 லட்சம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு சீசனில் மும்பை அணியின் அனைத்து போட்டிகள் முடிந்து விட்டன. எனவே அடுத்த ஐ.பி.எல். சீசனில் மும்பை அணியின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்