விதிமுறையை மீறிய பொல்லார்ட், டிம் டேவிட்...அபராதம் விதித்த ஐ.பி.எல். நிர்வாகம்.. எவ்வளவு தெரியுமா...?

ஐ.பி.எல். தொடரில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதின.

Update: 2024-04-20 09:41 GMT

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

முன்னதாக இந்த வருடம் மும்பை கிரிக்கெட் அணிக்கு பல தருணங்களில் நடுவர்கள் சாதகமாக நடந்து கொள்வதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வீசிய பின் நாணயத்தை தலைகீழாக எடுத்து மும்பை வெற்றி பெற்றதாக நடுவர் அறிவித்ததாக விமர்சித்தனர்.

அதனால் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் டாஸ் போடும்போது கேமராமேன் சுண்டப்பட்ட நாணயம் அருகே சென்று படம் பிடித்து காண்பித்தார். அதே போட்டியில் 15-வது ஓவரின் கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவுக்கு எதிராக அர்ஷிதீப் சிங் வைடு யார்கர் வீசினார். அதை சூர்யகுமார் அடிக்காமல் தவற விட்ட நிலையில் களத்தில் இருந்த நடுவர் வைடு வழங்கவில்லை.

ஆனால் அதை பெவிலியினில் இருந்து பார்த்த மும்பை அணியின் பயிற்சியாளர் பொல்லார்ட் மற்றும் டிம் டேவிட் ரிவியூ எடுக்குமாறு சூரியகுமாருக்கு சைகை செய்தனர். அதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ரிவ்யூ எடுத்தார். ஆனால் அப்போது "பெவிலியனில் இருந்தவர்கள் சொன்ன பின் சூர்யகுமார் ரிவ்யூ எடுத்ததால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது" என்று நடுவரிடம் பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரண் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருப்பினும் அதையெல்லாம் மதிக்காத நடுவர் ரிவியூவை ஏற்றுக் கொண்டார். பின்னர் அதை சோதித்த 3-வது நடுவர் வைடு வழங்கினார். அதனால் மும்பைக்கு சாதகமாக நடுவர்கள் நடந்து கொள்வதாக மீண்டும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

குறிப்பாக 2017-ல் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் பெவிலியனில் இருந்த பயிற்சியாளர்களை பார்த்து விட்டு எல்பிடபுள்யூ ரிவியூ எடுத்தார். அதை இந்திய கேப்டன் விராட் கோலி தடுத்து நிறுத்தினார். கிட்டத்தட்ட அதே ஆஸ்திரேலிய அணியைப்போல அந்த இடத்தில் மும்பை அணியினர் நடந்து கொண்டதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் பொல்லார்ட் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் விதிமுறையை மீறியதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே அந்த இருவருக்கும் அப்போட்டிக்கான சம்பளத்திலிருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்