சாம்சனின் தவறான முடிவால்தான் ராஜஸ்தான் தோல்வியை தழுவியது - சேவாக், டாம் மூடி விமர்சனம்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்து வெளியேறியது.

Update: 2024-05-25 09:47 GMT

சென்னை,

17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி ஐதராபாத் 2-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளாசென் 50 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட் & ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளும், சந்தீப் ஷர்மா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. அந்த அளவுக்கு சிறப்பாக பந்து வீசிய ஐதராபாத் தரப்பில் ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகளும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் மற்றும் நடராஜன் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

இந்நிலையில் இப்போட்டியில் ஷபாஸ் அகமது, அபிஷேக் சர்மா ஆகிய 2 இடது கை ஸ்பின்னர்கள் அழுத்தத்தை ஏற்படுத்தியபோது இடது கை பேட்ஸ்மேனான ஹெட்மயர் 5-வது இடத்தில் களமிறங்கியிருக்க வேண்டுமென்று டாம் மூடி தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு வலது கை பேட்ஸ்மேனான துருவ் ஜுரேலை களமிறக்கிய கேப்டன் சஞ்சு சாம்சனின் முடிவு ராஜஸ்தானின் பைனல் கனவை உடைத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "என்னைப் பொறுத்த வரை இது தவறான முடிவாகும். நன்றாக விளையாடி வரும் துருவ் ஜுரேல் எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நன்றாக விளையாடுவார். ஆனால் அந்த நேரத்தில் 2 இடது கை ஸ்பின்னர்கள் பந்து வீசினார்கள். அங்கேதான் பிரச்சினை இருந்தது. எனவே ராஜஸ்தான் ஹெட்மயரை பேட்டிங் செய்ய அனுப்பியிருக்க வேண்டும். குறிப்பாக இந்த இடது கை ஸ்பின்னர்கள் போட்டியை கட்டுப்படுத்த விடாமல் உங்களுடைய ஆட்டத்தை விளையாடுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்" என்று கூறினார்.

அதே நிகழ்ச்சியில் வீரேந்திர சேவாக் பேசியது பின்வருமாறு:-"ஹெட்மயரை தாமதமாக கொண்டு வந்த முடிவு எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. ராஜஸ்தான் அவரை முன்னதாகவே கொண்டு வந்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் 2 இடது கை ஸ்பின்னர்கள் இருந்தனர். அந்த நிலையை சமாளிக்க வேகமாக விளையாடக்கூடிய இடது கை பேட்ஸ்மேன் சிறந்த தேர்வாக இருக்கும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்