டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் இடம்பெறுவாரா ஹர்திக்..? ரோகித் - அகர்கர் சந்திப்புக்கு பின் வெளியான தகவல்

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் குறித்து ரோகித், டிராவிட் மற்றும் அஜித் அகர்கர் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-04-17 04:04 GMT

மும்பை,

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கடந்த வாரம் மும்பையில் சந்தித்து டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர். இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஐ.பி.எல். தொடர் முடிந்த உடனேயே அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்ய இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனால் இந்திய அணி நிர்வாகம் ஹர்திக்கின் பந்துவீச்சு மற்றும் உடற்தகுதி குறித்து கவலை கொண்டுள்ளது.

இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா முக்கிய வீரராக இருக்க காரணமே அவர் அதிரடி பேட்டிங் செய்யும் திறன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் என்பதுதான். ஆல்ரவுண்டர் என்ற அடையாளத்தின் காரணமாகவே ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார். ஆனால், அவர் 2024 ஐபிஎல் தொடரில் பந்துவீச்சில் படுமோசமாக செயல்பட்டு வருகிறார். மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா 6 போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

தற்போதைய இந்திய அணியில் பலர் டி20 போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனாக பாண்ட்யாவின் பங்கை செய்ய முடியும். ஆனால் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக நான்கு ஓவர்களை வீசுவது ஹர்திக்கால் மட்டுமே முடியும். அதனால்தான் பாண்ட்யா முக்கியமானதாக கருதப்படுகிறார்.

ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் அவர் பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே பாண்ட்யா 4 ஓவர்களை வீசியுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு ஓவரை மட்டுமே வீசினார். சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான போட்டியில், பாண்ட்யா 3 ஓவர்கள் வீசினார். ஆனால் எதிலும் சிறந்த செயல்பாடு இல்லை. 

இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பாண்ட்யா இடம்பெற நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிகளவில் பந்து வீச வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பந்து வீச்சில் அவரது பார்மை மீட்டெடுக்கவே இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்