இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்து அசத்தல்

சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 231 பந்துகளில் இரட்டை சதமடித்து அசத்தினார்.

Update: 2024-02-18 07:45 GMT

Image :AFP 

ராஜ்கோட்,

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித், ஜடேஜாவின் அபார சதம் மற்றும் அறிமுக வீரர் சர்பராஸ் கானின் அரை சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா19 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார் . இதன் பின் ஜெய்ஸ்வால் - சுப்மன் கில் ஜோடி சேர்ந்து இங்கிலாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். மறுமுனையில் சுப்மன் கில் அரைசதம் அடித்து அசத்தினார். ஜெய்ஸ்வால் 133 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த நிலையில் முதுகுவலி காரணமாக ரிட்டையர் ஹர்ட் மூலம் வெளியேறினார். இதையடுத்து களம் இறங்கிய ரஜத் படிதார் டக் அவுட் ஆனார். இதையடுத்து குல்தீப் யாதவ் களம் இறங்கினார்.

இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 51 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 196 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 65 ரன்னுடனும், குல்தீப் 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கியது.

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மன் கில் 91 ரன்னில் (ரன் அவுட்) ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரிட்டையர் ஹர்ட் மூலம் வெளியேறிய ஜெய்ஸ்வால் களமிறங்கினார். மறுபுறம் குல்தீப் யாதவ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜெய்ஸ்வாலுடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். சர்பராஸ் கான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்தார்.  மறுபுறம் ஜெய்ஸ்வால் அதிரடியை தொடங்கினார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 231பந்துகளில் (14 பவுண்டரி , 10 சிக்சர் ) இரட்டை சதமடித்து அசத்தினார். இந்திய அணி தற்போது வலுவான நிலையில் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்