ஷிவம் துபே டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற அது மட்டுமே தடை - ஏபி டி வில்லியர்ஸ்

ஆர்.சி.பி. அணியை விட சி.எஸ்.கே.-வில் சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பு ஷிவம் துபேவுக்கு கிடைத்துள்ளதாக ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார்.

Update: 2024-04-18 09:18 GMT

கேப்டவுன்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.

இந்த தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடர் மட்டுமின்றி கடந்த இரு சீசன்களாக சென்னை அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஷிவம் துபேவை டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என பல இந்திய முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.சி.பி. அணியை விட சி.எஸ்.கே. அணியில் சுதந்திரமாக விளையாடும் வாய்ப்பு ஷிவம் துபேவுக்கு கிடைத்துள்ளதாக ஏபி டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். அந்த வாய்ப்பில் அபாரமாக செயல்படும் துபே டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியானவர் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இருப்பினும் ரிங்கு சிங், ரியன் பராக், தினேஷ் கார்த்திக் போன்ற நிறைய வீரர்கள் உலகக்கோப்பையில் விளையாடப் போட்டியிடுவது துபேவின் இடத்திற்கு தடையாக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஆர்.சி.பி. அணியிலிருந்து வெளியே வந்தது முதல் அவர் நீண்ட தூரத்தை கடந்து வந்துள்ளார். அவர் சி.எஸ்.கே. அணியில் சுதந்திரமாக விளையாடுவது போன்ற ஏதோ ஒரு உணர்வை கண்டுபிடித்துள்ளார். அதனால் அங்கே அவர் தன்னுடைய வாழ்வின் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதுபோல் தெரிகிறது.

களத்திற்கு செல்லும் அவர் எதைப் பற்றியும் அதிகம் சிந்திக்காமல் பந்தைப் பார்த்து சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அடிக்கிறார். அவர் அவுட்டாகாமல் சில 50+ ரன்களை அடித்தது சி.எஸ்.கே. அணியின் வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிவம் துபே டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனக்கான இடத்தை கண்டறிய முடியும். இருப்பினும் அங்கே நிறைய டிராபிக் இருப்பது மட்டுமே அவருக்கான ஒரே தடையாக இருக்கலாம். பவர் ஹிட்டரான அவர் அற்புதமான வீரர்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்