இதன் காரணமாக தான் தோனியை தல என்று அழைக்கின்றனர் - சுனில் கவாஸ்கர்

ஐ.பி.எல் தொடரில் பல்வேறு நாடுகளில் இருந்து, பல்வேறு நகரங்களில் இருந்து பல வீரர்கள் விளையாடுவார்கள்.

Update: 2024-04-13 12:11 GMT

Image Courtesy: @ChennaiIPL

மும்பை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து ஐ.பி.எல் தொடரில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் மிகப்பெரிய ஆட்டமான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை மோத உள்ளன.

இந்த வருடம் முதல் முறையாக தலா 5 கோப்பைகளை கேப்டன்களாக வென்ற எம்.எஸ். தோனி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் சாதாரண வீரர்களாக விளையாட உள்ளனர். நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகளின் கேப்டன்களாக முறையே ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சி.எஸ்.கே தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுவதற்கு தோனி முக்கிய காரணமாக உள்ளதாகவும், அதனாலயே அவரை தல என்று அழைக்கின்றனர் எனவும் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நான் ஐ.பி.எல் தொடரில் ஆதரவு கொடுக்க 2 அணிகள் இருக்கிறது. முதலில் மும்பை. ஏனெனில் நான் மும்பையைச் சேர்ந்தவர். அதனால் மும்பை. பின்னர் சி.எஸ்.கே. சென்னை அணி தொடர்ச்சியாக அசத்துவதற்கு தோனி முக்கிய பங்காற்றுகிறார். அதனாலயே ரசிகர்கள் சொல்வது போல் அவர் தல.

ஐ.பி.எல் தொடரில் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு நகரங்களில் இருந்து வீரர்கள் விளையாடுவார்கள். அவர்களை ஒன்றிணைத்து ஐ.பி.எல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இலக்கை நீங்கள் உருவாக்க வேண்டும். இன்னும் 6 வாரங்களில் நாம் இந்த தொடரை வெல்ல வேண்டும். அதற்கு உங்களுக்கு சில மகத்தான வீரர்கள் தேவைப்படலாம்.

அணியின் கலவைக்காக சில வீரர்களை பெஞ்சிலும் அமர வைக்கலாம். ஆனால் அவர்களை நீங்கள் பயனற்றவர்கள் என்று உணர வைக்கக்கூடாது. அவர்களை நீங்கள் அணியின் முக்கிய நபர்களாக வைத்திருக்க வேண்டும். அவற்றை செய்யக்கூடிய திறன் எம்.எஸ் தோனியிடம் இருக்கிறது. அதனாலேயே அவரை ரசிகர்கள் தல என்று அழைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்