ஆர்.சி.பி அணி பயிற்சியை ரத்து செய்தது ஏன்..? - குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம்

இன்று நடைபெற்று வரும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன.

Update: 2024-05-22 14:38 GMT

image courtesy: twitter/ @RCBTweets

அகமதாபாத்,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வரும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில், புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ், 4-வது இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.

இந்த நிலையில் இந்த ஆட்டத்திற்கு முன் பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைது செய்தனர்.

அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு அணிகளின் நிர்வாகங்களுக்கும் (ஆர்.சி.பி மற்றும் ராஜஸ்தான்) குஜராத் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆர்.சி.பி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும், விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில், ராஜஸ்தான் - பெங்களூரு போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளரான அனில் படேல் கூறியதாவது, குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 2-5 மணிவரை பயிற்சி செய்ய பெங்களூரு அணி திட்டமிட்டிருந்தது. ஆனால் கோடைக்காலத்தில் மாலை 6.30 மணிவரை வெளிச்சம் இருக்கும் என்பதால் பயிற்சியை 3-6 மணிக்கு மேற்கொள்ளலாம் என்று அணி நிர்வாகம் திட்டமிட்டது.

ஆனால் வெப்ப அலை காரணமாகவே பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. அதே சமயம் குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ராஜஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்