அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்துமா கொல்கத்தா? மும்பை அணியுடன் இன்று மோதல்

அடுத்தடுத்த தோல்விகளால் மும்பை அணியின் பிளே ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

Update: 2024-05-03 00:14 GMT

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளி பெற்று தடுமாறுகிறது. அந்த அணியின் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு கடந்த ஆட்டத்தில் லக்னோவிடம் தோற்றதுடன் மங்கி விட்டது. மும்பை அணி இனிவரும் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவு தனக்கு சாதகமாக அமைவதுடன், ரன்-ரேட்டிலும் திடமாக இருந்தால் ஒருவேளை அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிக்கலாம். மாறாக இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி முதல் அணியாக வெளியேறும்.

2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த கொல்கத்தா அணியும், அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து போகாமல் பார்த்து கொள்ள மும்பை அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் மும்பை அணி 23 முறையும், கொல்கத்தா அணி 9 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

வான்கடே மைதானத்தை பொறுத்தமட்டில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை அணி பெருமளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இங்கு 10 ஆட்டங்களில் மும்பையுடன் மோதி இருக்கும் கொல்கத்தா அணி 9-ல் தோல்வி அடைந்துள்ளது. ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் மும்பையை வீழ்த்த முடியாமல் தவிக்கும் கொல்கத்தா அணி அந்த நிலையை மாற்றுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

 

Tags:    

மேலும் செய்திகள்