ஹாட்ரிக் வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்? டெல்லியுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.;
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. மாலை 3.30 மணிக்கு ஆமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்-ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 31 ரன் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் 277 ரன்கள் குவித்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் எடுத்த அணி என்ற மகத்தான சாதனையை படைத்து அனைவரையும் மலைக்க வைத்தது.
ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, மார்க்ரம் அதிரடியில் அசத்துகிறார்கள். பந்து வீச்சில் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, ஷபாஸ் அகமது ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
குஜராத் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை சாய்த்தது. 2-வது ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் பணிந்தது. குஜராத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், விருத்திமான் சஹா, டேவிட் மில்லரும், பந்து வீச்சில் ரஷித் கான், சாய் கிஷோர், மொகித் ஷர்மா, ஸ்பென்சர் ஜான்சனும் சிறப்பான திறன் படைத்தவர்கள்.
விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியன் சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும், 2-வது ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சையும் தோற்கடித்து வலுவான நிலையில் இருக்கிறது. சென்னை அணி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிக்கும் ஆவலுடன் தயாராகி உள்ளது.
சென்னை அணியில் பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜாவும், பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரகுமான், தீபக் சாஹர், துஷர் தேஷ்பாண்டே, பதிரானாவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும். அடுத்த ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. பேட்டிங்கில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கேப்டன் ரிஷப் பண்ட், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அபிஷேக் போரல் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தாலும் சரியான பார்ட்னர்ஷிப் ஆட்டம் அமையாதது அவர்களுக்கு பின்னடைவாக இருக்கிறது.
பலமான சென்னை சூப்பர் கிங்சுக்கு சவால் அளிக்க வேண்டும் என்றால் டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர எழுச்சி பெற வேண்டியது அவசியமானதாகும்.