கால்பந்து
5–வது உலக கோப்பை 1954 (சாம்பியன்– மேற்கு ஜெர்மனி)

இந்த உலக கோப்பையில் தான் வீரர்கள் சகட்டுமேனிக்கு கோல் மழை பொழிந்தனர். முதல் முறையாக கோல் எண்ணிக்கையில் செஞ்சுரி அடிக்கப்பட்டது.
நடத்திய நாடு–சுவிட்சர்லாந்து, பங்கேற்ற அணிகள்–16இந்த உலக கோப்பையில் தான் வீரர்கள் சகட்டுமேனிக்கு கோல் மழை பொழிந்தனர். முதல் முறையாக கோல் எண்ணிக்கையில் செஞ்சுரி அடிக்கப்பட்டது. ஆட்டத்திற்கு சராசரியாக 5.38 வீதம் கோல்கள் விழுந்ததால் ரசிகர்களும் உற்சாகத்தில் மிதந்தனர். அது மட்டுமின்றி இந்த உலக கோப்பை போட்டிகள் முதல்முறையாக டெலிவி‌ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.ஸ்காட்லாந்து, துருக்கி, தென்கொரியா ஆகிய அணிகள் ‘கன்னி’ அணிகளாக இந்த உலக கோப்பையில் அடியெடுத்து வைத்தன. முந்தைய உலக கோப்பையில் தடை விதிக்கப்பட்ட ஜெர்மனி, ஜப்பானுக்கு தகுதி சுற்றில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனி இரண்டாக உடைந்தது. இதில் மேற்கு ஜெர்மனி இந்த உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. தொடர்ந்து 3–வது முறையாக இந்த உலக கோப்பையையும் அர்ஜென்டினா புறக்கணித்தது.இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு முன்னணி அணிகளுக்கு தரவரிசை வழங்கப்பட்டது. அதாவது தரவரிசை பெற்ற அணிகள் தனது பிரிவில் தரவரிசை இல்லாத அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் என்பது விதிமுறையாகும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின.கால்இறுதி ஆட்டங்களில் உருகுவே 4–2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும், மேற்கு ஜெர்மனி 2–0 என்ற கோல் கணக்கில் யூகோஸ்லாவியாவையும் தோற்கடித்தன. ஆஸ்திரியா 7–5 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்திய சுவிட்சர்லாந்தை விரட்டியது. உலக கோப்பையில் ஒரு ஆட்டத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச கோல் எண்ணிக்கை (12) இந்த போட்டியில் தான்.ஒலிம்பிக் சாம்பியன் ஹங்கேரி– பிரேசில் இடையிலான கால்இறுதியில் முரட்டு ஆட்டம் தாறுமாறாக தலைதூக்கியது. மூன்று வீரர்கள் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ‘பவுல்’ செய்ததற்காக 42 முறை ‘பிரிகிக்’ வாய்ப்பு வழங்கப்பட்டது. முடிவில் ஹங்கேரி 4–2 என்ற கோல் கணக்கில் பிரேசிலை தோற்கடித்ததும், மோதல் வெடித்தது. இரு அணி வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, அந்த மோதல் வீரர்களின் ஓய்வறை வரை நீடித்தது.அரைஇறுதி ஆட்டங்களில் மேற்கு ஜெர்மனி 6–1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவையும், ஹங்கேரி 4–2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் உருகுவேயையும் சாய்த்தது.இந்த உலக கோப்பையை பொறுத்தவரை, ஹங்கேரி அணியை பற்றி குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும். 1950–ம் ஆண்டு மே மாதத்தில் இருந்து ஹங்கேரி தோற்கடிக்க முடியாத அணியாக வலம் வந்தது. அது தான் ஹங்கேரியின் பொற்காலமாகும். லீக் சுற்றில் கூட அந்த அணி 9–0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவையும், 8–3 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியையும் ஊதித்தள்ளியது.ஹங்கேரியின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்ததால், இறுதிப்போட்டியை எட்டியதும் அந்த அணி தான் கோப்பையை வெல்லும் என்று அனைத்து தரப்பிலும் உறுதியாக நம்பப்பட்டது. ஹங்கேரி நாட்டு குழுவினர் தங்கள் அணிக்கு வரவேற்பு அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கினர். ஏனெனில் அந்த சமயத்தில் ஹங்கேரியையும், மேற்கு ஜெர்மனியையும் ஒப்பிடும் போது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக பார்க்கப்பட்டது.பெர்ன் நகரில் ஜூலை 4–ந்தேதி அரங்கேறிய இறுதிப்போட்டியில் ஹங்கேரியும், மேற்கு ஜெர்மனியும் சந்தித்தன. 8 நிமிடத்திற்குள் ஹங்கேரி அடுத்தடுத்து இரண்டு கோல்களை திணித்தது. ஆனால் அதன் பிறகு தான் நம்ப முடியாத அதிசயங்கள் மைதானத்தில் நிகழ்ந்தன. பின்தங்கி இருந்தாலும் பிரிட்ஸ் வால்டர் தலைமையிலான மேற்கு ஜெர்மனி வீரர்கள் துளியும் தளர்ந்து விடவில்லை. நம்பிக்கையுடன் முழு மூச்சுடன் போராடினர். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. 10–வது நிமிடத்தில் மோர்லாக்கும், 18–வது நிமிடத்தில் ஹெல்மெட் ரானும் கோல் போட்டு பதிலடி கொடுத்தனர். இதனால் 2–2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையை அடைந்தது. யார் வசம் வெற்றிக்கனி கிட்டும் என்ற பரபரப்பான கட்டத்தில் 84–வது நிமிடத்தில் மேற்கு ஜெர்மனி வீரர் ஹெல்மெட் ரான் உதைத்த பந்து மீண்டும் வலைக்குள் நுழைய, ஹங்கேரி வீரர்கள் அதிர்ச்சியில் திகைத்து போனார்கள். இதன் பிறகு ஹங்கேரி வீரர் புஸ்காஸ் அடித்த கோலை ஆப்–சைடு என்று நடுவர் அறிவிக்க சர்ச்சைக்கு மத்தியில் மேற்கு ஜெர்மனி அணி 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக மகுடம் சூடியது. இதை ‘பெர்ன் நகரில் கற்பனைக்கு எட்டாத முடிவு’ என்றே வர்ணித்தனர்.இத்துடன் தொடர்ச்சியாக 31 ஆட்டங்களில் தோல்வி பக்கமே செல்லாத ஹங்கேரியின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது. இந்த உலக கோப்பைக்கு பிறகு ஹங்கேரியின் எழுச்சி முற்றிலும் அடங்கிப்போனது. ஆனால் ஜெர்மனியின் எழுச்சி இந்த உலக கோப்பையில் இருந்தே ஆரம்பித்தது.இந்த உலக கோப்பையில் மொத்தம் நடந்த 26 ஆட்டங்களில் 140 கோல்கள் பதிவாகின. இதில் ஹங்கேரி மட்டும் 27 கோல்களை போட்டுத்தள்ளியது. ஒரு உலக கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அணி என்ற சரித்திர புத்தகத்தில் இந்த நாள் வரை ஹங்கேரியின் பெயரே இடம் பெற்றிருக்கிறது.இரண்டு ‘ஹாட்ரிக்’ அடித்த முதல் வீரர்ஹங்கேரி வீரர் சான்டோர் கோசிஸ் இந்த தொடரில் மொத்தம் 11 கோல்கள் (5 ஆட்டம்) அடித்து தங்க ஷூவை கைப்பற்றினார். இதில் தென்கொரியா, மேற்கு ஜெர்மனிக்கு எதிரான லீக் ஆட்டங்களில் ‘ஹாட்ரிக்’ கோல் போட்டதும் அடங்கும். ஒரு உலக கோப்பையில் இரண்டு முறை ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த முதல் வீரர் இவர் தான். ஆனால் இந்த உலக கோப்பையில் அவர் இறுதி ஆட்டத்தில் மட்டும் கோல் அடிக்க தவறினார். அதனால் தான் என்னவோ, அந்த அணி கோப்பையை பெறவும் தவறியது.