11-வது உலக கோப்பை 1978 (சாம்பியன் அர்ஜென்டினா)

அர்ஜென்டினா நடத்திய உலக கோப்பை கால்பந்து போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன.

Update: 2018-06-01 23:30 GMT

இந்த உலக கோப்பை கால்பந்து போட்டியை அர்ஜென்டினா நடத்தியது. அப்போது அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சி நடந்ததால் சில அணிகள் போட்டியில் பங்கேற்க தயக்கம் காட்டின. பிபா பல நாடுகளை சமரச படுத்தியதாலும், அணிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததாலும் போட்டியில் கலந்து கொண்டன. இருப்பினும் சில முன்னணி வீரர்கள் தயக்கம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகினார்கள்.

இங்கிலாந்து, பெல்ஜியம், செக்கோஸ்லோவக்கியா, உருகுவே, சோவியத் யூனியன் ஆகியவை இந்த முறை உலக கோப்பை போட்டியில் தகுதி சுற்றுடன் நடையை கட்டிய அணிகளில் குறிப்பிடத்தக்கவையாகும். ஈரான் மற்றும் ஆப்பிரிக்க நாடான துனிசியா ஆகியவை முதல்முறையாக உலக கோப்பை போட்டியில் அடியெடுத்து வைத்தன. 1966-ம் ஆண்டுக்கு பிறகு பிரான்ஸ், ஸ்பெயின், ஹங்கேரி அணிகள் மீண்டும் தகுதி பெற்றன. தகுதி சுற்று போட்டியில் இந்த முறை 100 நாடுகளுக்கு மேல் கலந்து கொண்டன.

கடந்த போட்டியை போலவே இந்த முறையும் போட்டி அட்டவணை இருந்தது. போட்டியில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் தங்கள் பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த இத்தாலி, அர்ஜென்டினா, போலந்து, மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, பிரேசில், பெரு, நெதர்லாந்து ஆகிய அணிகள் 2-வது சுற்றுக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியன் மேற்கு ஜெர்மனி அணி லீக் ஆட்டங்களில் போலந்து, துனிசியாவுக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் டிரா கண்டது. துனிசியா அணி லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. உலக கோப்பை போட்டியில் ஆப்பிரிக்க அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும்.

2-வது சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் லீக்கில் மோதின. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்து இருந்த நெதர்லாந்து அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவையும், 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியையும் சாய்த்தது. மேற்கு ஜெர்மனியுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. இதன் மூலம் 5 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி கண்டது. ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 3 புள்ளிகள் பெற்ற இத்தாலி அணி அந்த பிரிவில் 2-வது இடம் பிடித்தது. ‘பி’ பிரிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தையும், 6-0 என்ற கோல் கணக்கில் பெருவையும் விரட்டியடித்தது. பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தில் 0-0 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. இதேபோல் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் பெருவையும், 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தையும் தோற்கடித்தது. அர்ஜென்டினாவுடன் 0-0 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. தலா 2 வெற்றி, ஒரு தோல்வி கண்ட அர்ஜென்டினா, பிரேசில் அணிகள் 5 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தாலும், கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

பியூனஸ் அயர்சில் (ஜூன் 25-ந் தேதி) அரங்கேறிய இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரம் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை வகித்தன. இதனை அடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினா அணி வீரர்கள் மரியோ கெம்ப்ஸ் (105-வது நிமிடம்), பெர்டோனி (115-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் அர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி முதல்முறையாக உலக கோப்பையை உச்சி முகர்ந்தது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை சாய்த்தது.

இறுதிப்போட்டியில் 2 கோல்கள் உள்பட இந்த போட்டி தொடரில் மொத்தம் 6 கோல்கள் அடித்த அர்ஜென்டினா அணி வீரர் மரியோ கெம்ப்ஸ் தங்க ஷூ விருதை தனதாக்கினார். அர்ஜென்டினா அணி உலக கோப்பையை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்ற நாடுகள் வரிசையில் 5-வது இடத்தை பிடித்தது. ஏற்கனவே உருகுவே, இத்தாலி, இங்கிலாந்து, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் தங்கள் சொந்த மண்ணில் போட்டியை நடத்துகையில் கோப்பையை வென்று இருந்தது நினைவிருக்கலாம். இந்த போட்டி தொடரில் மொத்தம் 102 கோல்கள் (38 ஆட்டங்களில்) பதிவாகின.

மேலும் செய்திகள்