கால்பந்து
உலக கோப்பை போட்டியை நேரில் காண அமெரிக்க ரசிகர்கள் அதிக ஆர்வம்

தங்கள் நாடு தகுதி பெறாவிட்டாலும் உலக கோப்பை போட்டியை நேரில் காண அமெரிக்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நாளை தொடங்குகிறது. போட்டியை நேரில் காண வசதி படைத்த ரசிகர்கள் பலர் ரஷியாவை நோக்கி பயணம் ஆகி வருகிறார்கள். அமெரிக்க அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும், அந்த நாட்டில் இருந்து தான் அதிக அளவில் ரசிகர்கள் ரஷியா சென்று போட்டியை கண்டுகளிக்க தயாராகி இருக்கிறார்கள் என்பது விமான டிக்கெட் முன்பதிவின் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் கால கட்டத்தில் அமெரிக்காவில் இருந்து ரஷியாவுக்கு பயணம் ஆகும் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 34 சதவீதம் அதிகரிக்கும் என்று புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டியை காண அமெரிக்காவில் இருந்து ரஷியாவுக்கு செல்லும் நபர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 66 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

4 முறை சாம்பியனான இத்தாலி அணி 1958-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறவில்லை. இதனால் உலக கோப்பை போட்டியை காண நேரில் செல்லும் இத்தாலி ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்பது வெளிச்சமாகி இருக்கிறது. உலக கோப்பையை நேரில் கண்டு களிக்க பயணிக்கும் இத்தாலி ரசிகர்களின் எண்ணிக்கை 16 சதவீதம் சரியும் என்று தெரிகிறது.

நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் அந்த நாட்டு ரசிகர்கள் அதிக அளவில் ரஷியா செல்ல திட்டமிட்டுள்ளனர். அதாவது போட்டியை நேரில் பார்க்க ரஷியாவுக்கு செல்லும் ஜெர்மனி ரசிகர்களின் எண்ணிக்கை 44 சதவீதம் அதிகரிக்கும் என்று பயண தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.