பிரான்ஸ் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

Update: 2018-06-16 22:45 GMT
கஜன்,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று கஜன் நகரில் நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி, ஆஸ்திரேலியாவை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் பிரான்ஸ் அணியின் ஆட்டம் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை. 17-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்த பிரிகிக் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் ஆரோன் மூய் கோல் அடிக்க முயற்சித்தார். ஆனால் அதனை பிரான்ஸ் அணியின் பின்கள வீரர்கள் பிரமாதமாய் தடுத்து பந்தை வெளியில் திருப்பினார்கள். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

58-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆன்டோன் கிரிஸ்மான் எதிரணி கோல் எல்லையில் பந்துடன் விரைந்தார். அவரை ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ரிஷ்டான் விதிமுறைக்கு புறம்பாக தடுத்து தள்ளிவிட்டார். இதற்கு போட்டி நடுவர் ஆந்த்ரே குன்ஹா (உருகுவே) பெனால்டி கொடுக்க மறுத்து விட்டார். இதனை அடுத்து பிரான்ஸ் அணியினர் அப்பீல் செய்தனர். வீடியோ உதவி நடுவர் பரிசீலனையில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த உலக கோப்பை போட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட வீடியோ உதவி நடுவர் முறை மூலம் வழங்கப்பட்ட முதல் பெனால்டி வாய்ப்பு இதுவாகும். இந்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஆன்டோன் கிரிஸ்மான் அருமையாக கோல் அடித்தார்.

இதனால் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் இந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 62-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் உம்திதி பந்தை கையினால் கையாண்டதால் ஆஸ்திரேலிய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. இதனை பயன்படுத்தி அந்த அணி கேப்டன் மில் ஜெடினாக் கோல் அடித்தார். இதனால் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

81-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி 2-வது கோல் போட்டது. அந்த அணி வீரர் பால் போக்பா இந்த கோலை அடித்தார். அதன் பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

போட்டிக்கு பிறகு பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்ஸ் கூறுகையில், ‘நாங்கள் சிறந்த ஆஸ்திரேலிய அணியை தான் எதிர்கொண்டோம். எப்பொழுதும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகும். அதனை நாங்கள் செய்து இருக்கிறோம். கடந்த 4 உலக கோப்பை போட்டிகளில் நாங்கள் எங்களுடைய தொடக்க ஆட்டத்தில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தோம். இதனால் இந்த வெற்றியை நல்ல தொடக்கமாக கருதுகிறோம்’ என்றார்.

மேலும் செய்திகள்